இலங்கையில் சிறிலங்க இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் நடைபெற்றுவரும் பகுதியில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் ஒரு திட்டம் குறித்து அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
முல்லைத் தீவுப் பகுதியில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, சிறிலங்கப் படைகளின் தொடர்ந்த எறிகணைத் தாக்குதலில் நாளும் கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களை, அங்கிருந்து வெளியேற்றி, அவர்களுக்குரிய மனிதாபிமான உதவிகளை அளிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
webdunia photo
FILE
அமெரிக்கா சென்றுள்ள இந்திய அயலுறவு அமைச்சகச் செயலர் சிவ் சங்கர் மேனன், இத்திட்டம் குறித்து (இது அமெரிக்காவின் திட்டம் என்று கூறப்படுகிறது) அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுடன் விவாதித்ததாக செய்திகள் கூறினாலும், இலங்கை குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று இந்தியத் தரப்பு கூறியுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு திட்டம் அல்லது நடவடிக்கை சரியானதா? அது போரினால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதற்கான சரியான நடவடிக்கையாக இருக்குமா? என்பது மிகவும் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியதாகும்.
சிறிலங்க விமானப் படையும், இராணுவமும் தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் திட்டமிட்ட இனப் படுகொலைத் தாக்குதலால்தான் ஈழ மக்களை இப்படிப்பட்ட அல்லலிற்கு ஆளாகியுள்ளது என்பது உலக நாடுகளுக்குத் தெரியாத விவரமல்ல. ஆனால் அது இனப் படுகொலைதான் என்று இந்தியா உட்பட எந்த ஒரு நாடும் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை!
அமெரிக்கா பயன்படுத்திய ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற முழக்கத்தை தனக்கு சாதமாகப் பயன்படுத்தி, ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் ஒரு இயக்கத்தை அழித்து ‘அமைதியை’ நிலைநாட்டுவோம் என்று கூறிக்கொண்டு, அதற்குச் சாதகமாக இந்தியாவின் ‘நட்புறவையும்’ நன்கு பயன்படுத்திக் கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீதே முப்படைத் தாக்குதல்களையும் நடத்தி அவர்களை மானுடம் காணா பேரழிவிற்கு ஆளாக்கிவருகிறது சிறிலங்க அரசு. அப்பட்டமான இந்த மானுட அழிப்பு நடவடிக்கையை பெயரளவிற்கு கண்டிக்கும் உலக நாடுகள், இன்றுவரை சொந்த நாட்டு மக்களை கொல்லும்
webdunia photo
FILE
நடவடிக்கையை (அது இனப் பிரச்சனை என்று நன்கு புரிந்தும்) இன்ப படுகொலை என்று கூறாமல், 21வது நூற்றாண்டிலும் 2 மாதத்தில் 2,000 பேரைக் கொன்று, 5,000 பேரை படுகாயப்படுத்திய ஒரு அரசினை பயங்கரவாத அரசு என்று முத்திரை குத்தி தனிமைப்படுத்தாமலும் அமைதி காத்து வரும் அதே வேளையில், அம்மக்களை காப்பாற்றும் வழிமுறைகளை பற்றி மட்டும் சிந்திக்கின்றன என்றால் அது உலக மக்களை முட்டாளாக்கி ஏமாற்றும் இராஜ தந்திரமின்றி வேறென்ன?
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க அரசப் படைகளுக்கும் நடைபெறும் போரினால் பெரும் பாதிப்பிற்கு ஆளாவது அப்பாவி மக்களே என்பதை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் உணர்ந்துள்ளது உண்மையென்றால், அவர்களைக் காக்க போர் நிறுத்தம் செய் என்றல்லவா வலியுறுத்த வேண்டும்.
சொன்னார்கள், ஒருமுறைக்கு பல முறை சொன்னார்கள். ஐ.நா.வும் சொன்னது. ஆனால் சிறிலங்க அரசு நிராகரித்தது. அதிபர் ராஜபக்ச ஒருமுறைக்குப் பல முறை நிராகரித்தார். ஏன் நிராகரிக்கின்றாய்? உன் சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிக் கொல்வதை எவ்வாறு நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது? என்று எந்த நாடாவது கேள்வி எழுப்பியதா? இல்லையே. ஏன்? ஏனென்றால் எல்லாம் உலகை ஏமாற்ற உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளே!
webdunia photo
FILE
“போரின் மூலம் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது, பேச்சுவார்த்தையின் மூலமே நிலைத்த நீடித்த அரசியல் தீர்வு காண முடியும், அதற்கு சிறிலங்க அரசு முன்வர வேண்டும்” என்று முழங்கிய இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள், போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று ராஜபக்ச அறிவித்தவுடன் அடங்கிப் போவது ஏன்? அடக்கி வாசிப்பதும் ஏன்?
ஒரு காரணம் நிதர்சனமானது. அது இந்தியாவின் சில தலைவர்களும், தமிழ்நாட்டின் பல தலைவர்களும் நாளும் கூறுவது போல, தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் சிறிலங்க அரசுடன் நல்லுறவு கொண்டுள்ள இந்தியா, அதற்கு ஆயுதம் வழங்குவது முதல் ஆலோசனை அளிப்பது வரை எல்லா வழிகளிலும் உதவி, இனப் படுகொலையை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது. இதனை இந்தியா பெரிதாக மறுக்கவில்லை, ஏனென்றால் தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இந்த நடவடிக்கையை அதுவும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்றே கூறுகிறது. தமிழர்களை அதிகம் பாதித்தது விடுதலைப் புலிகள் தான் என்றும் நாடாளுமன்றத்திலேயே அயலுறவு அமைச்சர் கூறினார். எனவே இந்தியாவைப் பொறுத்தவரை அங்கே நடப்பது இனப் படுகொலையுமல்ல, அதனை திட்டமிட்ட மேற்கொண்டுவரும் அதிபர் ராஜபக்சயின் அரசு பயங்கரவாத அரசும் அல்ல.
ஆனால் இது ஏன் உலக நாடுகளுக்குப் புரியவில்லை? ஒரு அளவிற்கு மேல் இந்தப் படுகொலையை கண்டிப்பதும், போர் நிறுத்தம் செய் என்று ஓரிரு முறை ‘வேண்டுகொள்’ விடுப்பதையும் தாண்டி அவைகளின் நடவடிக்கை நீளாததும் ஏன்? இந்த கேள்விக்கு தமிழினம் பதில் தேட வேண்டும்.
இந்த உலகம் மனிதாபிமானத்திலோ அல்லது மானுடத்தின் ஒட்டுமொத்த நலனில் அக்கறைகொண்டோ இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அவைகள் தங்களின் பொருளாதார நலன்களை முன்னிறுத்தியும், பொருளாதார நலனுடன் ஒன்றிணைந்த பாதுகாப்புக் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகளாவியப் பொருளாதாரம் நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதைவிட சந்தையை கைப்பற்றும் நோக்கில்தான் சிரத்தையுடன் விளையாடுகின்றன. இந்தியாவைப் போன்ற வளர்ந்துவரும் ஒரு மூன்றாம் உலக நாடு தனது அதிகரித்துவரும் மின் தேவையை கருத்தில் கொண்டு மேற்கொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு, அமெரிக்காவுடனான ஒரு இராஜ தந்திர நட்புறவிற்கு வழிவகுத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான Indo - American Strategic partnership என்பது அப்படிப்பட்ட பொருளாதார - பாதுகாப்பு நலன்களைச் சார்ந்ததுதான். அதனால்தான் அதனை (அணு சக்தி ஒத்துழைப்புடன் சேர்த்து) இடதுசாரிகள் எதிர்த்ததோடு மட்டுமின்றி, மன்மோகன் அரசிற்கு அளித்துவந்த ஆதரவையும் திரும்பப் பெறச் செய்தன.
webdunia photo
FILE
பன்னாட்டு அணு சக்தி முகமையினால் ஒரு அணுத் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியா, தனது அணு மின் சக்தி உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்த அதி நவீன அணு மின் உலைகளை பெற்று நிறுவ ஒபபந்தம் செய்து கொண்டு வருகிறது. பிரான்ஸுடன் முதற்கட்டமாக 2 அதிக திறன் கொண்ட அணு உலைகளை பெறுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. மேலும் 4 அணு உலைகளைப் பெற ஒப்பந்தம் தரவுள்ளது.
இப்படிப்பட்ட வணிக ஒப்பந்தங்கள் அது தொடர்பான இரு நாடுகளையும் வணிகத்தையும் தாண்டி கட்டுப்படுத்துகின்றன. ஒப்பந்தத்தைப் பெறும் நாடு, அதனை அளிக்கும் நாட்டின் சர்வதேச அணுகுமுறைகளை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகிறது. அப்படிப்பட்ட கட்டாயத்தை தங்களுடைய நாட்டின் பொருளாதார நலனை கருத்தில்கொண்டு கமுக்கமாக ஏற்கும் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் கடைபிடிக்கும் சில முரண்பட்ட அணுகுமுறைகளை மெளனமாக ஆதரிக்கின்றன.
இன்றைக்கு பிரான்ஸ், நாளைக்கு அமெரிக்காவும் இதேபொன்றதொரு ஒப்பந்தத்தை இந்தியாவிடம் பெறவுள்ளது. எனவே வணிக, இராஜ தந்திர உறவுகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணையப்பட்டுள்ளதால், ஒன்று மற்றொன்றின் வசதியான அணுகுமுறைகளை கேள்வியின்றி ஏற்கிறது. மெளனமான ஆதரவை நல்குகிறது.
இந்த வணிக இராஜ தந்திரக் கட்டாயம்தான் ஈழத் தமிழர் பிரச்சனையிலும் பெரிதும் விளையாடுகிறது. இந்திய அரசின் அணுகுமுறைக்கு எதிராக - ஆசியாவிற்கு அப்பால் - எந்த ஒரு நாடும் எதிர் அணுகுமுறையை கையாளத் தயங்குகின்றன. அதனால்தான் போர் நிறுத்தம் என்று கோருவதுடன் அவைகள் நின்று விடுகின்றன. ஏனென்றால் இந்தியா போர் நிறுத்தம் கோரவில்லையே?
அதனால்தான் இனப் படுகொலை தங்கு தடையின்றி நடத்தும் அதனை இந்தியா கண்டிக்காததால், தடுக்க முற்படாததால் அவைகளுடன் தயங்கி நிற்கின்றன. ஆசியாவின் இரண்டு வல்லரசுகளாகத் திகழும் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் அயலுறவில் மாறுபட்ட கோணங்களில் பார்க்கின்றன. இதில் இராஜ தந்திர ரீதியிலும், வணிக-பொருளாதார நோக்கிலும் இந்தியாவையே மேற்கத்திய வல்லரசுகள் பெரிதும் நட்புப் பாராட்டி நெருக்கமான உறவைப் பேண முற்படுகின்றன.
இப்படிப்பட்ட பின்னல்கள்தான் ஈழத்தில் ஒரு இனப் படுகொலையை தடையின்றி நடத்த வழிவகுக்கிறது. சிறிலங்க அரசுடனான தனது உறவை பலப்படுத்திக் கொள்ள அதன் நடவடிக்கைகளை ஆதரிப்பதையே சரியான வழியாக மன்மோகன் அரசு பார்க்கிறது. அதனால்தான் போர் நிறுத்தம் செய் என்று வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் இறையாண்மையில் தலையிடும் செயலாகும் என்று கூறிக்கொண்டு, அதே நேரத்தில் எல்லா வகையிலும் அந்த அரச பயங்கரவாத அரசிற்கு உதவுகிறது.
எனவே இந்தியா அசையவில்லை, மற்ற நாடுகளும் அசைய மறுக்கின்றன. ஆனாலும் தங்களின் இந்த ‘நலன் பேணும்’ அணுகுமுறையை மறைக்க அவைகள் ‘மனித உரிமை மீறல்’, ‘அப்பாவி மக்கள் பாதிப்பு’ என்றெல்லாம் கூறி, ஏதோ அவர்களை காப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுவதுபோல ஒரு பாவனையைச் செய்கின்றன.
அதுதான் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் திட்டம்! போர் நடக்கும் பகுதியில் மட்டுமல்ல, இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் அனைத்தும் இன்று ஒரு அரச பயங்கரவாத நடவடிக்கையில் சிக்கி முணங்கிக் கொண்டிருப்பதை இவர்கள் அனுப்பிய சிறப்பு தூதர்கள் உணர்ந்திருக்க மாட்டார்களா? தெரியும், தெரிந்தும் கண்டும் காணாததுபோன்று நடந்துகொள்கின்றனர்.
webdunia photo
FILE
வன்னிக்கு வந்த ஐ.நா.வின் சிறப்புத் தூதர், அங்கு சிறிலங்க படைகளின் கண்காணிப்பில் இருந்த முகாம்களில் தமிழர்கள் எப்படி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள் என்பதையும், தாங்கள் படும் இன்னல்களை தெரிவிக்க முடியாத ‘நிலை’ அங்கு நிலவியதையும் கண்ணுற்றிருக்க மாட்டாரா? பிறகு ஏன் அதை ஐ.நா. அவையில் தெரிவிக்கவில்லை? எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டு மனிதாபிமானம் பேசுவது நேர்மையா?
அந்த மக்களை காக்க வேண்டும் என்றால், அங்கு போரை நிறுத்தச் செய்து, போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் கட்டுப்பாடு காக்கச் செய்து, ஏற்கனவே அங்கு போர் நிறுத்தம் நிலவியபோது இரு தரப்பினரும் எந்தெந்த இடத்தில் இருந்தனரோ அந்த இடத்திற்குத் திரும்பச் செய்து, அதன்பிறகு தீர்வை நோக்கிய பேச்சை துவக்க வழியேற்படுத்த வேண்டும். அதுதானே முறை? அதைச் செய்யாமல் அங்கிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு திட்டமிடுவது என்றால் என்ன பொருள்?
பாதுகாப்பு வலயத்திற்கு வந்த மக்களை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் எறிகணை வீசி கொன்றொழிக்கும் அரச படைகளின் ‘நல முகாம்’களுக்கு கொண்டு சென்று அடைத்து சித்ரவதைக்கு உள்ளாக்க உதவுவதா? இதுதானே நடக்கும்? இது எப்படி அவர்களைக் காப்பாற்றுவதாக ஆகும்.
மக்கள் வெளியேறிய பிறகு அங்கு போராளிகள் மட்டுமே எஞ்சியிருப்பர், அவர்கள் மீது தங்களது சரக்கில் உள்ள சக்தி வாய்ந்த குண்டுகளை வீசிக் கொன்றொழித்துவிட்டு பிறகு ‘பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்களா?’ அதிபர் ராஜபக்சவின் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் இந்த வெளியேற்ற நடவடிக்கை என்பதெல்லாம் தமிழினத்திற்கு புரியாதா? அந்த அளவிற்கு யோசிக்கத் திறனற்றவரா தமிழர்?
போரை நிறுத்துங்கள், சகஜ நிலையை ஏற்படுத்துங்கள், பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என்று போராளிகள் தரப்பு கூறுகிறது, அதை ஏற்க உலகத்திற்கு என்னத் தயக்கம்? அப்படியானால் உலக நாடுகளின் வணிக-பொருளாதாரம் சார்ந்த வர்த்தக உறவிற்கு தமிழர்கள் இனம் அழிக்கப்பட வேண்டுமா? அவர்களின் சுதந்திரக் குரல்வளை நெருக்கப்படுமா?
உலக நாடுகளின் அரசுகள் தங்கள் வசதிக்கு எதையும் செய்யலாம் என்று நினைத்தால் அவைகள் கனவுலகில் வாழ்கின்றன என்பதே உண்மை. இன்றைக்கு ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலையை பெரும்பான்மை உலகம் அறியாதிருக்கலாம், ஆனால் இந்த நிலை நீடிக்காது. இலங்கையை நோக்கி ஒருமுறை தனது பார்வையை உலக மக்கள் திருப்பிவிட்டார்கள் என்றால், பிறகு அந்த இனப் படுகொலையை தடுக்கத் தவறிய அனைத்து நாடுகளையும் அவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவார்கள். பழைய பயங்கரவாத முழக்கத்தை காட்டி அவர்களை திசை திருப்ப முடியாது. இன்றைக்கு தனது துயரத்திற்கு முடிவு தேடி உலக மக்களை நோக்கி தமிழினம் கூக்குரல் விடுக்கிறது. அதற்கு மானுடன் செவி சாய்க்கும் காலம் மிக தூரத்தில் இல்லை.
அரசுகளைத் தாண்டி மானுடம் ஈழத் தமிழினத்தைக் காக்கும்.