இயேசு தன் வாழ்நாளில் செய்த அற்புதங்கள்....
போதனைகளை முடித்த இயேசு பின்னர் நயீன் எனும் ஊரை நோக்கிச் சென்றார். மக்கள் கூட்டம் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றது. நயீன் ஊர் வாசலில் ஒரு மரண ஊர்வலம் அவர்களை எதிர்கொண்டது. அழுகையும், ஒப்பாரியுமாய் அவர்களை நெருங்கியது அந்த ஊர்வலம்.
இறந்து போனவன் ஒரு இளைஞன். அவனுடைய தாய்க்கு அவன் ஒரே மகன். அவள் ஒரு கைம்பெண். ஊர்வலம் இயேசுவின் அருகே வந்தது. இயேசு நின்றார். அந்தத் தாயைப்பார்த்தார். ஆதரவற்ற நிலையில், அனாதைபோல அழுது புலம்பிக் கொண்டிருந்த அவளுடைய நிலை அவருடைய மனதைத் தொட்டது.
அழாதீர்கள் அம்மா...
‘ஐயா... எனக்கு இருந்த ஒரே ஆதரவும் இப்படிப் போய்விட்டதே’ அந்தத் தாய் கதறினாள். இயேசு பாடையைத் தொட்டார், ‘இளைஞனே நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திரு’ என்றார். இறந்து கிடந்த அந்த இளைஞன் எழுந்திருந்தான்.
தனது மகன் உயிர்பெற்றதைக் கண்ட தாய் ஆனந்த அதிர்ச்சியடைந்தாள். இயேசுவின் பாதத்தில் விழுந்தாள்.
‘இவர் மிகப்பெரிய இறைவன்’ என மக்கள் அழுத்தமாய்ப் பேசத்தொடங்கினார்கள்.