புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (19:12 IST)

லெய்லா -நெட்ஃபிலிக்ஸ் தொடர் விமர்சனம்!

பத்திரிகையாளரான பிரயாக் அக்பர் எழுதி 2017ல் வெளியான லெய்லா நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் இந்த லெய்லா. மும்பையின் காஸ்மோபாலிடன் வாழ்க்கைக்கு மாறாக அங்குள்ள சில அரசியல் கட்சிகள் முன்வைத்த பிரிவினைவாத, தூய்மைவாத கொள்கைகள் நடைமுறைக்கு வந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை முன்வைத்து அந்த நாவலை எழுதியிருந்தார் அக்பர்.



திரைப்படம்: லெய்லா
நடிகர்கள்: ஹுமா குரேஷி, சித்தார்த், சீமா பிஸ்வாஸ், ராகுல் கன்னா, லெய்ஸா மாங்கே
இசை: அலோகநந்தா தாஸ்குப்தா
இயக்கம்: ஷங்கர் ராமென், தீபா மேத்தா, பவன் குமார்.
 
ஆனால், அதே சூழல் இந்தியா முழுவதும் ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்தத் தொடர்.
 
வருடம் 2047. இந்தியா என்ற நாடு இல்லாமல்போய் ஆர்யவர்த்தம் என்ற புதிய தேசம் உருவாகியிருக்கிறது. மகாத்மா காந்தி தேசத்தின் தந்தையில்லை. ஜோஷி என்பவரே தேசத்தின் தந்தை. அவர் சொல்வதே சட்டம். நகரங்களும் குடிசைப் பகுதிகளும் கோட்டைச் சுவர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
 
கலப்பு மணம் செய்தவர்கள் கோட்டைக்குள் உள்ள நகரினுள் வசிக்க முடியாது. அவர்களது குழந்தைகள் அவர்களிடம் இருந்து பிரிக்கப்படும். கோட்டைக்கு வெளியில் வசிப்பவர்கள் 'தூஷ்' என அழைக்கப்படுகிறார்கள். மாசுபட்ட நீர், நிலம், காற்று ஆகியவற்றோடு போராடி வாழ்பவர்கள் அவர்கள்.


 
இந்த ஆர்யவர்த்தம் நாட்டில் ஷாலினி (ஹுமா குரேஷி) என்ற இந்துப் பெண் ரிஸ்வான் (ராகுல் கன்னா) என்ற முஸ்லிமை திருமணம் செய்கிறாள். அவர்களுக்கு லெய்லா என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. வாழ்க்கை சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும்போது, ஒருநாள் சில குண்டர்கள் வீட்டிற்குள் நுழைந்து ரிஸ்வானை அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். ஷாலினி, பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறாள்.
 
விதவைகள், கலப்பு மணம் புரிந்தவர்களைத் தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட வனிதா முக்தி கேந்திரம் என்ற காப்பகம் அது. அங்கே இருந்தபடி தன் குழந்தையைத் தேட ஆரம்பிக்கிறாள் ஷாலினி. பானு (சித்தார்த்) என்ற இளைஞனின் காவலில் பிறரது வீடுகளில் வேலை செய்ய அனுப்பப்படுகிறாள் அவள். ஆனால், பானு ஒரு புரட்சிக்காரன் எனத் தெரிய வருகிறது.


 
இதற்கிடையில், கோட்டைக்குள் உள்ள நகர் முழுவதையும் மூடி, தூய்மையான காற்று, நீர் ஆகியவற்றை வழங்குவதற்கான 'ஸ்கைடோம்' என்ற கட்டுமானம் ஒன்றை ஜோஷி திட்டமிடுகிறார். இந்த 'ஸ்கைடோமில்' இருந்து வெளியேறும் வெப்பத்தால் 'தூஷ்'கள் வசிக்கும் உன்னதி என்ற பகுதி அழிந்துவிடும் என்றாலும் இதனைச் செயல்படுத்த முயல்கிறது ஆர்யவர்த்தம்.
 
இந்த நிலையில் ஷாலினியின் உதவியுடன் ஜோஷியை கொல்லத் திட்டமிடுகிறான் பானு. தன் குழந்தையை மீட்கத் திட்டமிடுகிறாள் ஷாலினி. இந்த சீஸன் ஒன்றின் ஆறாவது எபிசோடில், ஆர்யவர்தத்தின் தலைவரான ஜோஷி அறிமுகமாகிறார். ஆர்யவர்தத்திற்குள் இருக்கும் உள்அரசியல் முரண்பாடுகளும் மெல்ல மெல்ல வெளிப்பட ஆரம்பிக்கின்றன. இதுவரையிலான கதையோடு சீஸன் ஒன்று முடிவடைகிறது.
 
உண்மையில் ஒரு துணிச்சலான முயற்சி. இந்தியாவின் தற்போதைய சூழலை மனதில் வைத்து அக்பரின் லெய்லா நாவலை, உருமாற்றியிருப்பது சிறப்பான கற்பனை. இந்தத் தொடரில் வரும் பல குறியீடுகளும் சம்பவங்களும் நமக்கு தற்போதைய இந்தியாவை நினைவுபடுத்தும்.
 
தாஜ்மகால் இடிக்கப்படுவதை பாபர் மசூதி இடிப்போடும், உன்னதி நகரின் குப்பை மேட்டை தில்லி நகரின் குப்பை மேட்டோடும், 'ஜெய் ஆர்யவர்த்' என்ற முழக்கத்தை தற்போது ஓங்கி ஒலிக்கும் முழக்கங்களோடும் எளிதில் ஒப்பிட முடியும்.
 
ஆனால், முழுக்க முழுக்க இந்து எதிர்ப்பு - இஸ்லாமிய ஆதரவு தொடராக இதனைச் சொல்ல முடியாது. முஸ்லிமான ரிஸ்வானின் சகோதரனான நாஸ் ஒரு மதவெறியனாகவே காட்டப்படுகிறார். தவிர, முஸ்லிம்களுக்கென இதேபோன்ற கோட்டையுடன் ஒரு இடத்தைக் கட்டவும் நாஸ் விரும்புபவதாகக் காட்டப்படுகிறான்.
 
இந்தத் தொடரில் பல குறைகள் இருக்கின்றன. பல காட்சிகள் மிக மெதுவாக நகர்கின்றன. நாவலில் ஒரு நகரத்தைச் சுற்றி நடக்கும் கதையை, இந்தியா முழுமைக்குமாக இந்தத் தொடரில் விரித்திருக்கிறார்கள்.
 
அதனால் சில குழப்பங்கள் நேர்ந்திருக்கின்றன. அதாவது, கோட்டைச் சுவரை எங்கே கட்டியிருக்கிறார்கள், இந்தியா முழுவதுக்கும் ஸ்கைடோம் கட்டமுடியுமா போன்ற குழப்பங்கள் உண்டு. தவிர, சர்வாதிகாரம், பெண்ணுரிமை, பேச்சுரிமை, ஜாதிப் பிரிவினைக் கொடுமை, சுற்றுச்சூழல் மாசுபாடு என பல பிரச்சனைகளையும் தொட்டுச் செல்வதால், எந்தப் பிரச்சனை குறித்தும் ஆழமாகச் சொல்ல முடியவில்லை.
 
மேலும் புரட்சிக்காரர்கள் இருக்குமிடம் தெரிந்தும், அதனை ஆர்யவர்த்தம் முழுமயைாக அழிக்காமல் விட்டுவிடுகிறது.
 
ஆனால், திரைக்கதைக்குப் பின்னால் இருக்கும் துணிச்சல் இந்தக் குறைகளை மறைத்துவிடுகிறது. நாம் தற்போது எளிதாக நினைக்கும் பல விஷயங்கள் இல்லாமல் போகும்போதுதான் அவற்றின் அருமை தெரியவரும். உண்மையிலேயே அவற்றை இழந்து, அந்த அருமையைத் தெரிந்துகொள்ள முடியாது. அதனால்தான், இம்மாதிரியான dystopian வகை கதைகளும் சினிமாக்களும் முக்கியத்துவம் பெருகின்றன.
 
நெட்ஃப்ளிக்ஸ் ஏற்கனவே Goul என்ற dystopian தொடரை வெளியிட்டிருந்தது. அதில் பூடகமாக சொல்லப்பட்டிருந்த பல அம்சங்கள் இதில் வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.
 
இந்தத் தொடரில் வரும் எல்லா நடிகர்களுமே அசத்துகிறார்கள். தொடரின் நாயகியான ஹுமா குரேஷி, நாயகன் சித்தார்த் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள் எனச் சொல்லிவிடுவது எளிது. ஆனால், சிறிய பாத்திரங்களில் வருபவர்கள்கூட மிளிர்கிறார்கள்.
 
இந்தியாவில் கூர்மையான அரசியல் விமர்சனங்களுடன் திரைப்படங்கள் வெளியாவது கிட்டத்தட்ட இல்லாமலேயே போயிருக்கும் சூழலில் வெளியாகியிருக்கிறது Leila.