வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2016 (18:36 IST)

தணிக்கை குழுவிற்கு குட்டு வைத்த நீதிமன்றம் - 89 காட்சிகளை நீக்கிய படத்திற்கு அனுமதி

போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை கருப்பொருளாக கொண்ட உத்தா பஞ்சாப் படத்தின் 89 காட்சிகளை தணிக்கைக் குழு நீக்கியது. தற்போது அந்த படத்திற்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 

 
இயக்குநர் அபிஷேக் சவுபே இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘உத்தா பஞ்சாப்’. போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை கருப்பொருளாக கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர். இந்த படம் வருகிற 17–ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
 
இதையொட்டி, ‘உத்தா பஞ்சாப்’ படத்தை தணிக்கை செய்த தணிக்கைக் குழு, அதில் சில காட்சிகள் ஆட்சேபணைக்கு உரியதாக இருப்பதாக கூறி நீக்கியது. ஆட்சேபணை இருப்பதாக கூறி 89 காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு கூறியதாக தெரிகிறது.
 
இதனால், வேதனை அடைந்த 43 வயது தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப், ‘‘திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நீக்குவது, துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்வதற்கு சமம்’’ என்று டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
 
இந்தப் படம் தொடர்பான வழக்கை திங்கள்கிழமை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், ‘உத்தா பஞ்சாப்’ திரைப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் அளிக்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டது.
 
பஞ்சாப் மாநிலத்தின் போதை மருந்து கலாச்சாரத்தைச் சித்தரிக்கும் உத்தா பஞ்சாப் என்ற படத் தலைப்பிலிருந்து பஞ்சாப் என்ற வார்த்தையை நீக்குமாறு கோர எந்தவித நியாயமும் இல்லை என்று கூறியுள்ளது.
 
படத்தை ஒரு ‘கட்’ உடன் அனுமதி அளித்து, உரிமை துறப்பு (டிஸ்கிளைமர்) வாசகத்தில் மாற்றம் செய்ய உத்தரவிட்டதோடு, படத்திற்கு புதன்கிழமைக்குள் ‘ஏ’ சான்றிதழ் அளிக்கவும் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இப்படம் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
உத்தா பஞ்சாப் படத்தில் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைக்கும் எவ்விதக் கருத்தும் இல்லை. ஒரு திரைப்படத்தின் கதைக்களம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் கருத்தாக்கச் சுதந்திரம் திரைப்பட இயக்குநர்களுக்கு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.