வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஆன்மிகம்
  4. »
  5. கட்டுரைகள்
Written By Webdunia

ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 11

மிலெரபா


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கைலாஷ் மலை அருகே வாழ்ந்த மிலெரபா, இந்தப் பகுதியில் மிகப் பெரிய ஆன்மிக நிகழ்வுகளை நிகழ்த்தினார். அவர் ஓரளவுக்குச் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். திபெத் கலாச்சாரத்தில் செல்வச் செழிப்பானவர்கள் என்றால், 12 பசுமாடுகளை வைத்திருப்பவர்கள் என்று அர்த்தம்.

WD
செல்வச் செழிப்பு என்பது எப்போதுமே சமூகம் சார்ந்தது. பணக்காரக் குடும்பத்தில் பிறந்த மிலெரபா, தன் ஏழாவது வயதில் தந்தையை இழந்தார். மிலெரபா சிறுவனாக இருந்ததால், அவரது சொத்துக்கள் எல்லாம் அவரது மாமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மிலெரபா வளரும் வரை அதைப் பாதுகாத்து, மிலெரபா வளர்ந்தவுடன் அவற்றை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மிலெரபா வளர்ந்தவுடன் அவரது மாமா சொத்துக்களைத் திருப்பித் தர மறுத்தார். எனவே, மிலெரபாவும் அவரது தாயும் மிகவும் வறுமையில் வாழ்ந்தனர். இதனால் அவரது தாய் மிலெரபாவைத் தூண்டிவிட்டார், ‘அவர்களை எப்படியாவது அழிக்கவேண்டும்’.

எனவே மிலெரபா கைலாஷூக்கு மிக அருகே உள்ள ஓர் இடத்துக்கு பில்லி சூனியம் கற்கச் சென்று, மாந்திரீகத்தைக் கற்றுக்கொண்டு திரும்பினார். ஒருநாள் தன் மாந்திரீக பலத்தால் பலத்த இடியுடன் கனமழை பெய்யச் செய்தார். மிலெரபாவின் மாமா தன் மகனின் திருமண நாளைக் கொண்டாடிக்கொண்டு இருந்தார். அந்த கனமழையில் அவரது வீடு இடிந்து அவரும் அவரது விருந்தினர்கள் 35 பேரும் இறந்துபோனார்கள். இதைப் பார்த்த மிலெரபாவின் தாய்க்கு சந்தோஷம். தன் மகனால் அவர்கள் அனைவரும் உயிரிழக்க நேர்ந்ததை எண்ணி சந்தோஷப்பட்டார். ஆனால், மிலெரபாவுக்கோ மனதில் போராட்டம்.

அவரது தேடுதல் அவரைப் பல இடங்களுக்கும் இட்டுச் சென்றது. கடைசியாக அது மார்பாவைக் கண்டவுடன் முடிவுக்கு வந்தது. மார்பாவும் இந்தியாவை நான்கு முறை சுற்றி வந்தவர். அவர் புத்த மத போதகர், நரோபாவின் சீடர்.

எனவே மிலெரபா அவரிடம் சென்று தன்னை அர்ப்பணித்தார். புத்தர் செய்த மகத்தான விஷயங்களில் இதுவும் ஒன்று. அவர் தன்னை குருவிடம் அர்ப்பணிக்கும்போது, ‘குருவே, என் உடல், மனம், சொற்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்றார். இந்தியர்கள் எப்போதும் செய்யும் தவறு இதுதான். அவர்கள் எங்கே சென்றாலும் ‘என் உயிரையே உங்களுக்குத் தருகிறேன்’ என்பார்கள்.

உங்களிடம் இல்லாததைத்தான் நீங்கள் எப்போதுமே கொடுக்கிறீர்கள். உங்களிடம் இருப்பதைக் கொடுப்பது என்பது மிகவும் கடினமானது.

WD
எனவே, “என் உடல், என் மனம், என் பேச்சை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். நீங்கள் எனக்கு உணவும் உடையும் வழங்கிக் கற்பிக்க வேண்டும்“ என்றார் மிலெரபா. மார்பா அவரை ஏறெடுத்துப் பார்த்து, “நான் கற்பிக்க மட்டுமே செய்வேன். உனக்கு உணவும் உடையும் வேண்டுமானால், அவற்றை நீயே சம்பாதித்துக்கொள். ஆனால் உணவும் உடையும் நான் தர வேண்டுமென எதிர்பார்த்தால், அவற்றை நான் தருகிறேன், கற்றுக்கொள்ள வேறு இடம் தேடிக்கொள்’ என்றார். அவர் பேரம் பேசினார். அவர்கள் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள்.

மிலெரபா, “சரி, என் உணவையும் உடையையும் நான் சம்பாதித்துக் கொள்கிறேன். நீங்களே கற்றுத்தாருங்கள்” என்றார். மார்பா மிலெரபாவிடம், அவரது எல்லா நிலங்களையும் உழுமாறு பணித்தார். பல வருடங்களாக மிலெரபா நிலத்தை உழுதுகொண்டே இருந்தார். மார்பாவோ நிலங்களை அதிகப்படுத்திக்கொண்டே போனார். எல்லா நிலங்களையும் உழச் சொன்னார். அப்போது பிற்காலத்தில் துறவியான மார்பாவின் மகன் கர்மதத் வளர்ந்துவிட்டார். எனவே மார்பா மிலெரபாவிடம், “என் மகன் வளர்ந்துவிட்டான். அவனுக்கு ஒரு வீடு கட்ட வேண்டும். நீயே அதை கட்டிமுடி” என்று பணித்தார்.

மிலெரபா இரவுபகலாக வேலை செய்தார். அவரது உடல் துரும்பாய் இளைத்தது. இரவுபகலாக வேலை செய்து ஒன்பது அடுக்கு வீட்டினைக் கட்டினார். பல வருடங்களாக அந்த வீட்டைக் கட்டிக்கொண்டு இருந்தார். ஒவ்வொரு செங்கல்லையும் அவரது கையால் எடுத்துவைத்தார்.

இப்படிச் செய்ததால் அவரது உடல் முழுவதும் காயங்கள். அவரால் வேலையே செய்ய முடியவில்லை. மார்பாவின் மனைவி தமீமா, மிகவும் கருணை உள்ளம் கொண்டவள். உடலெங்கும் ரத்தம் வழிய வழியத் தொடர்ந்து மிலெரபா வேலை செய்வதைப் பார்த்தாள். அவளால் தாங்க முடியவில்லை. அவள் மார்பாவிடம் சென்று முறையிட்டாள், “அவருக்கு விடுப்பு தாருங்கள், அவர் நம் வீட்டிலேயே நம் மகனைப் போல இருக்கிறார், இப்படிச் செய்வதை என்னால் தாங்க முடியவில்லை” என்றாள். மார்பாவும் அதற்கு உடன்பட்டார். “ஒரு மாதம் விடுப்பு தருகிறேன். அவரைக் குணப்படுத்தி மீண்டும் வேலைக்கு அனுப்பு” என்றார்.

எனவே தமீமா, மிலெரபாவுக்கு மருந்தும் உணவும் கொடுத்து கவனமாகப் பார்த்துக் கொண்டாள். சிறிது நாளில் அவர் குணமடைந்தார். மீண்டும் அவர் வேலைக்குத் திரும்பினார். ஒன்பது அடுக்குக் கட்டிடம் அவரால் முழுமையாகக் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்தைப் பார்த்த மார்பா, “இது கட்டப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. இதில் நான்கு மூலைகள் இருக்க வேண்டும். நீ மூன்று மூலைகளுடன் கட்டி உள்ளாய். இதை எரித்துவிட்டு வேறொன்றைப் புதிதாய் கட்டு” என்று பணித்தார்.

WD
மிலெரபா அந்த வீட்டை முழுவதுமாய் எரித்துவிட்டு மீண்டும் புதிதாய் இன்னொரு வீட்டைக் கட்டத் தொடங்கினார். “உங்கள் மகனுக்கு புதிதாய் ஒரு வீட்டைக் கட்டித் தருகிறேன். எனக்கு தீட்சை தாருங்கள்” என்று வேண்டினார். மார்பா அப்போதும், “முடியாது” என்று மறுத்துவிட்டார். நேற்று வந்தவர்களுக்கு எல்லாம் அவர் தீட்சை அளித்தார். மிலெரபாவோ பல காலமாகக் காத்திருந்தார். மார்பாவின் செயல்களால் அவரது மனைவி தமீமா மிகுந்த எரிச்சல் அடைந்தாள். தம் வீட்டில் கடுமையாய் உழைக்கும் மிலெரபாவின் மேல் அவள் அளவு கடந்த நேசம் காட்டினாள். எனவே அவள் ஒரு நாள் மார்பாவின் தனிப்பட்ட குறிப்பேட்டை எடுத்து, மார்பா எப்படி எழுதுவாரோ அதே போல அவரது கையெழுத்தில், மிலெரபாவுக்குத் தீட்சை அளிக்குமாறு எழுதி, பக்கத்து நகரத்திலிருந்த மார்பாவின் மூத்த சீடருக்கு மிலெரபாவின் மூலமாகவே அனுப்பி வைத்தாள். அந்த மூத்த சீடரான நியோக்பா அதைப் படித்துப் பார்த்துவிட்டு மிலெரபாவுக்கு தீட்சை அளித்தார்.

இதனால் என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கவில்லை. நியோக்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் மார்பா அவருக்கு என்ன கொடுத்தாரோ அதைத்தான் அவர் மிலெரபாவுக்கும் கொடுத்தார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எனவே, அவர் மீண்டும் தீட்சை அளித்தார். அப்போதும் அது பலனளிக்கவில்லை. தான் செய்த பாவங்கள்தான் இதற்குக் காரணம் என்று மிலெரபா நினைத்தார். ஏனென்றால் அவர் நிறைய மாந்திரீக வேலைகளைச் செய்திருந்தார் அல்லவா? அப்படிப்பட்ட செயல்களால்தான் தீட்சை பலனளிக்கவில்லை என்று எண்ணியவர், மூத்த சீடருடன் மீண்டும் திரும்பி வந்தார்.

மார்பாவின் இடத்தை நெருங்கும்போது மூத்த சீடர் நியோக்பா, மிலெரபாவிடம் தனக்கு மிகவும் சோர்வாக இருப்பதாகவும் அடுத்த நாளுக்குள்ளாக தான் வந்து சேர்ந்து விடுவதாகவும் சொல்லி அனுப்பிவைத்தார்.

மிலெரபா கட்டிய ஒன்பது அடுக்கு வீட்டின் உச்சித் தளத்தில் மார்பா நின்றிருந்தார். மிலெரபா மேலே சென்று அவரது காலில் வீழ்ந்து வணங்கினார். மார்பாவோ முகத்தை வேறு திசையில் திருப்பிக்கொண்டார். மிலெரபா அந்தப் பக்கம் சென்று மீண்டும் வணங்க, அப்போதும் மார்பா வேறு திசையில் திரும்பிக்கொண்டார். “எதன் காரணமாகவோ என் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால் மூத்த துறவி இங்கே வந்திருக்கிறார். அவரை நாம் வரவேற்க வேண்டும்“ என்றார் மிலெரபா.

அப்போது மார்பா சொன்னார், “இந்தியா முழுக்கச் சுற்றியலைந்து அரும்பொக்கிஷத்தை நான் கொண்டுவந்தபோது என்னை வரவேற்க ஒரு நொண்டிப் பறவைகூட இங்கே இல்லை. நான் ஏன் அந்த முட்டாளை வரவேற்க கீழிறங்கி வர வேண்டும்? அவனே வரட்டும்“ என்றார்.

மூத்த துறவி அடுத்த நாள் வந்தார். மார்பா மிகவும் கோபமாய், “என் அனுமதி இல்லாமல் இவனுக்கு எதற்காக நீ தீட்சை கொடுத்தாய்?” என்று கேட்டார். அதற்கு அந்தத் துறவி, “உங்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதிலிருந்த உங்கள் குறிப்பின்படியே செய்தேன்” என்றார். மார்பா அந்தக் கடிதத்தைக் கேட்டார். தமீமா சட்டென அந்த இடத்தைவிட்டு நழுவினாள். கடிதத்தைப் பார்த்த மார்பாவுக்குப் புரிந்துவிட்டது. தன் மனைவியை சுற்றுமுற்றும் தேடினார். அங்கே அவள் இல்லை.

மார்பா, அந்த தீட்சை வேலை செய்யாது எனக் கூறினார். அதைப் பயிற்சி செய்ய வேண்டாம் எனவும் மிலெரபாவிடம் கூறினார்.

ஒரு தியானத்தில் மட்டும் மிலெரபாவை ஈடுபடுத்தி வீணாக்க விரும்பவில்லை மார்பா. “இவ்வளவு வருடங்களாகப் பலவாறாக அவனைத் தூய்மைப்படுத்தினேன். ஆனால், உங்களது தவறான கருணையாலோ, அனுதாபத்தாலோ அதைக் கெடுத்துவிட்டீர்கள். மீண்டும் அவனுக்குத் தாமதப்படுகிறது” எமீண்டும் மிலெரபாவைத் தயார்படுத்தி அவருக்கு தீட்சை அளித்தார்.

மிலெரபா, பின்னாட்களில் புத்த மதத் துறவிகளில் மிகச் சிறந்த ஒருவராகப் பரிணமித்தார். அவர்தான் புத்த மதத்தை கைலாஷ் பகுதிகளில் நிலைநாட்டியவர்.

மிலெரபா, கைலாஷ் பகுதிகளில் பல காலங்கள் வாழ்ந்தவர். அவரது குருவின் தூண்டுதலால் மிலெரபாவுக்கு அறிவின் அத்தனை கதவுகளும் திறந்திருக்கக்கூடும். எனவே, கைலாஷ் என்பது அறிவு அத்தனையும் சேமிக்கப்பட்ட இடம். கைலாஷைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் ஒரு பிறவியில் நாம் உணர்ந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக எனது குரு வந்த தென் பகுதிக் கலாசாரத்தின் சில அம்சங்களைப்பற்றி நிச்சயமாக நாம் தெரிந்து கொள்வோம்!