1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala

அஷ்டமி, நவ‌மி அ‌ன்று நல்ல செயல்கள் செய்ய தயங்குவது ஏன்?

அஷ்டமி, நவ‌மி அ‌ன்று நல்ல செயல்கள் செய்ய தயங்குவது ஏன்?

கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும், ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தில் அதே நாளில் எதையும் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். இது ஏன்? 


 
 
ஜோ‌திட ர‌‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: 
சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு பழமொழி உண்டு. ஆனால், நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமி, நவமியையும், கிருஷ்ணனுக்குரிய அஷ்டமியையும், ராமனுக்குரிய நவமி ஆகிய நான்கு நாட்களும் அஷ்டமி, நவமிக்கு உகந்த நாட்கள். 
 
8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் அஷ்டமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். இவர்களுக்கு அஷ்டமியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. ஏனென்றால் அஷ்டமி என்பது 8வது திதி. அதனால், 8ஆம் எண்ணில் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அது ஒத்துவரும். 
 
அதேபோல, 8 என்பது சனி பகவான் ஆதிக்கம் உடைய எண். மகர ராசி, கும்ப ராசிக்காரர்களும் அஷ்டமி அன்று எது வேண்டுமானாலும் செய்யலாம். மேலும், சனி பகவானின் ஆதிக்கம் பிறந்தவர்கள். அதாவது, ஜாதகத்தில் சனி உச்சம் அல்லது ஆட்சி பெற்றவர்களும் அஷ்டமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களை பாதிக்காது. 
 
நவமி என்பது 9வது திதி. 9ஆம் எண்ணில் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவமி மிகவும் விசேஷமானதாக இருக்கும். இது செவ்வாயுடைய ஆதிக்கம் உள்ள திதி. அதனால் செவ்வாயினுடைய மேஷ ராசி, விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் நவமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
 
அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது; தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.
 
கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார்; இறுதியில் வெற்றி பெற்றார்.
 
இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும் நேரத்தில் மற உடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 
 
எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி திதிகள் ஏற்றவையாகும்.