இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் சிறைக்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜாமீன் பெற்று வெளிய வந்த பின், தமிழக அரசியல் சூழ்நிலையில் தற்போது பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் அணி, சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கினால் மட்டுமே இரு அணி இணைவதற்கான பேச்சு வார்த்தையில் பங்கு பெறுவோம் என தடாலடி காட்ட, தினகரனை விலக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்தது. இதைத்தொடர்ந்து, நான் கட்சிப்பணியிலிருந்து ஒதுங்கி விட்டேன் என தினகரனும் அறிவித்தார். அதன் பின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அவர் டெல்லி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், சசிகலா மற்றும் தினகரனிடமிருந்து ராஜினாமா கடிதத்தை பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என ஓ.பி.எஸ் அணி கறார் காட்ட, அதை எடப்பாடி அணி ஏற்றுக்கொள்ளாததால், பேச்சுவார்த்தை நடைபெறமால் இருக்கிறது.
இந்நிலையில்தான் தினகரன் வெளியே வந்துள்ளார். மேலும், இரண்டு அணிகளும் இணைவதற்கு நான் தடையாக இருக்கிறேன் என்றார்கள். எனவே ஒதுங்கியிருந்தேன். ஆனால், இதுவரை இரண்டு அணிகளும் ஒன்றிணையவில்லை. எனவே, நான் மீண்டும் கட்சி பணியை தொடர்வேன் என அதிரடி காட்டியது, எடப்பாடி மற்றும் ஈ.பி.எஸ் அணி என இரண்டிற்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வரை 31 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் 2 அமைச்சர்கள் தினகரனை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவுகளை தெரிவித்துள்ளனர். சில மாவட்ட செயலாளர்களும் அவர் பக்கம் வந்துள்ளனர். இதில் பல எம்.எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவி கனவில் இருப்பவர்கள் எனத் தெரிகிறது. எடப்பாடி அரசு தங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வராததாலும், தற்போது உள்ள அமைச்சர்களிடையே அவர்களுக்கு ஏற்பட்ட ஈகோ பிரச்சனை காரணமாகவே அவர்கள் தினகரன் பக்கம் வந்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எடப்பாடி அரசு மீது பல புகார்களை அவர்கள் அடுக்கினாலும், தற்போதைக்கு அமைதியாக இருப்போம் என அவர்களிடம் பேசி வருகிறார் தினகரன்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தனது கட்டுப்பாடில் கொண்டுவரவே தினகரன் திட்டமிடுவது தெளிவாக தெரிகிறது. ஆனால், ஆட்சியை கலைக்க அவர் முயலமாட்டார் என்பதில் எடப்பாடி அணியினர் தெளிவாக இருக்கின்றனர். ஏனெனில், ஆட்சியை கவிழ்த்த துரோகி என்ற பட்டத்தை பெற தினகரன் விரும்பமாட்டார். மேலும், திமுகவின் ஆதரவு இல்லாமல் ஆட்சியை கவிழ்க்கவும் முடியாது. எனவே, எத்தனை எம்.எல்.ஏக்கள் வேண்டுமானால் தினகரனை சந்திக்கட்டும். நமக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை என அமைதி காக்கிறார் எடப்பாடி. மேலும், எம்.எல்.ஏக்களை சரிகட்டினாலே தனது ஆட்சிக்கு எந்த பங்கமும் வரப்போவதில்லை என்பதை உணர்ந்துள்ளார்.
எனவே, மற்ற எம்.எல்.ஏக்கள் அவர் பக்கம் செல்லக்கூடாது என அவர்களிடம் பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறார் எடப்பாடி. அதேபோல், ஊடகங்களில் தலைகாட்டாமல், அமைச்சர் ஜெயக்குமார் மூலம் அனைத்தையும் தெரியப்படுத்தி வருகிறார் எடப்பாடி.
அதிமுகவில் தற்போது மூன்று அணி உருவாகியுள்ளது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுகள் எங்கு போய் முடியும் என்பதை காண பொதுமக்களும், அரசியல் ஆர்வலர்களும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.