வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2017 (05:37 IST)

தாம்பரத்தை தாண்டினால் தாமரையை யாருக்கும் தெரியாது. குஷ்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நீட் தேர்வு குறித்த பிரச்சனைக்கு மத்திய மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் நீட் நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகையும் காங்கிரஸ் காட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு பேசியதாவது:




 




நீட் தேர்வு நமது மாணவ- மாணவிகளை எந்த அளவு பாதிக்கும் என்பதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எந்த முடிவையும் பா.ஜனதா நிதானமாக எடுப்பதில்லை. திடீர் திடீரென்று இரவில் முடிவெடுகிறார்கள்.

ஏழை மாணவ- மாணவிகள் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவை தடுக்கிறார்கள்.

இந்தியாவில் இது மட்டும் பிரச்சினை அல்ல. எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன.

உத்தரபிரதேசத்தில் வெற்றி பெற்று விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் கோவாவிலும், மணிப்பூரிலும் பணபலத்தால் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஜனநாயக படுகொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

கோவா, மணிப்பூரை போல தமிழகத்திலும் நுழைந்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை கிராமங்கள், நகரங்கள் மட்டுமல்ல சென்னையில் கூட தாம்பரத்தை தாண்டினால் தாமரையை தெரியாது என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். கிராமங்களில் போய் பெண்களிடம் கேட்டால் வீட்டுக்கு பின்னால் குளத்தில் தாமரை கிடக்கிறது என்பார்கள்.

ஆனால் பா.ஜனதாவின் தாமரை சின்னத்தை அவர்களுக்கு தெரியாது. ஆனால் மூலை முடுக்கெல்லாம் காங்கிரசின் கை சின்னத்தை தெரியும். வருங்காலத்தில் காங்கிரஸ் நிச்சயமாக ஆட்சிக்கு வரும். அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.