1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : சனி, 24 டிசம்பர் 2016 (13:53 IST)

அவசரம் காட்டும் அதிமுகவினர்; அமைதி காக்கும் சசிகலா - பின்னணி என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால், அதிமுகவை வழிநடத்திச் செல்லும் தலைமையும், ஜெ. வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியும் தற்போது காலியாக இருக்கிறது.


 

 
ஜெ.வுடன் 30 வருடங்களாக ஒன்றாக இருந்தார் என்ற காரணத்தை கூறி, சசிகலா அந்த இரண்டு பொறுப்புகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
 
மேலும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தினந்தோறும் போயஸ் கார்டன் சென்று அவரை நேரில் சந்தித்தும், இது தொடர்பாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
ஆனால், சசிகலாவிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. அவர் என்ன முடிவெடுப்பார் என்பது மர்மமாகவே உள்ளது. இப்போதைக்கு கார்டனுக்குள் வரும் அதிமுக நிர்வாகிகளை சந்திக்கிறார். அடுத்தது நீங்கள்தான் கழகத்தை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற ஒட்டு மொத்த குரலையும், சோகம் ததும்பும் முகத்துடன் கேட்டுக் கொள்கிறார். ஆனால் அவர்களிடம் எந்த பதிலையும் அவர் கூறுவதில்லை.
 
அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ஏற்க அவர் அவசரம் காட்டவில்லை என்று தெரிகிறது. அந்த பதவியில் அவரை அமர வைக்க நிர்வாகிகளும், அமைச்சர்களும் ஆர்வம் காட்டினாலும், உண்மையான அதிமுக தொண்டர்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதை சசிகலாவும் உணர்ந்துள்ளார்.

ஜெ. மறைந்த சில நாளில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போயஸ் வார்டன் வாசலில் சசிகலாவிற்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதேபோல், தமிழகத்தில் பல இடங்களில், சசிகலாவிற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் மற்றும் பேனர்களில் அவரின் முகத்தை பலர் கிழித்தெறிந்தனர். ஒருபக்கம் சிலர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.


 

 



எனவே உளவுத்துறை மூலம் மக்களின் மனநிலையை அவர் அறிய முயன்றதாகவும், ஆனால், சசிகலாவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருப்பதை, உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும், விரைவில் வெளியாகவுள்ள சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின் இறுதி தீர்ப்பு எப்படி அமையும் என தெரியாது. எனவே அவர் அதுவரை பொறுமை காக்கலாம் என சிலரும், தற்போதைக்கு அவர் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வார், போகப் போக.. முதல்வர் பதவிக்கு அவர் குறிவைப்பார் என சில அதிமுகவினரும் பேசிக்கொள்கிறார்கள். 
 
அதிமுக பொதுக்குழு வருகிற 29ம் தேதி கூடுகிறது. சசிகலாவின் மௌனம் அன்று உடைய வாய்ப்பிருக்கிறது. 
 
அதிமுக தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்....