1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (05:55 IST)

ஓ.பி.எஸ். அணிக்கு இனிமேல் ஆட்கள் அவ்வளவுதான்: அமைச்சர் ஜெயக்குமார்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் கை கோர்த்து, தனி அணி உருவாக்கி செயல்பட்டு வருகிறார். அந்த கூட்டத்தின் எண்ணிக்கை இனிமேல் அதிகரிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


 

கடந்த 7ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பு மீது சராமாரியாக குற்றம் சாட்டினார். தன்னை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் தான் ராஜினாமா செய்ததாகவும் பகிரங்கமாக அறிவித்தார்.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சசிகலா ஆதரவாளர்கள், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என அதிமுகவில் இரண்டு அணிகள் உருவாகின.

இரண்டு அணியினருமே பிப்ரவரி 9-ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆனாலும், யாருக்கும் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதனையடுத்து ஓ.பி.எஸ். அணிக்கு அடுத்தடுத்து ஆட்கள் தாவிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து கூவத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் கை கோர்த்து, தனி அணி உருவாக்கி செயல்பட்டு வருகிறார். அந்த கூட்டத்தின் எண்ணிக்கை இனிமேல் அதிகரிக்காது. அவர்களே அதை உணரும் நேரம் வரும்.

அதே சமயத்தில் அதிமுகவுக்கு ஆட்சி அமைக்கக் கூடிய வகையில் அறுதிப்பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இருந்தும், அதற்கான கடிதத்தை ஆளுரிடம் சமர்ப்பித்தும், ஆளுநர் எங்களை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது, ஜனநாயக வரலாற்றில் கருப்பு நாளாக அமையும்.

அதனால் ஜனநாயக முறையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையில் ஆளுநர் எங்களை அழைக்க வேண்டும். இன்று, நாளையோ, எங்களை ஆட்சியமைக்க அழைப்பார் என எதிர்பார்க்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.