சசிகலா பற்றி நான் அப்படி கூறவில்லை - பல்டி அடித்த முன்னாள் அமைச்சர்


Murugan| Last Modified புதன், 14 டிசம்பர் 2016 (14:11 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு எதிராக நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 
சமீபத்தில், அவர் வெளியிட்ட கடிதம் என வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவியது. அந்த கடிதத்தில் “அம்மாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்து அதிமுக இயக்கம். நான் அவரின் பிள்ளை. நான் சசிகலாவை ஏற்கத்தயார். ஆனால், அதற்கு முன்பு தொண்டர்கள் வைக்கும் பரிட்சையில் அவர் தேர்ச்சி பெற வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில், 75 நாட்கள் அம்மாவிற்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என முழு வீடியோ ஆதாரத்தோடு அவர் வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால், அம்மா உயிலில் வேறு யார் பெயர் எழுதி இருந்தாலும், அவர்களை தவிர்த்து அவரை மானசீக தலைவியாக ஏற்றுக் கொள்கிறேன்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 
 
இந்நிலையில், இந்த கடிதத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஆனந்தன் விளக்கம் அளித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக விரோதிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற ஒரு தகவலை முகநூலில் வெளியிட்டுள்ளார்கள். இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். இதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நான் திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், ஜெயமணி என்பவர்தான் இந்த செயலை செய்துள்ளார். எனவே அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். ஜெயமணி என்பவர், ஆனந்தன் அமைச்சராக இருந்த போது, அவர் மீது பாலியல் மற்றும் பணமோசடி புகார்களை தொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :