1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2016 (05:38 IST)

ரூ. 300, 500 விட்டெறிந்தால் எம்.பி., எம்.எல்.ஏ. ஆகலாம் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடி

தற்போது எம்.பி., எம்.எல்.ஏ. ஆகுவதற்கு கல்வி தகுதி தேவையில்லை. தேர்தலுக்கு முன்பு ரூ 300, ரூ500 என்று விட்டெறிந்தால் எம்பி எம்எல்ஏ ஆகிவிடலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
 

 
காட்டுமன்னார்கோவில் அருகே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கூடுதல் பள்ளி கட்டிட திறப்பு விழா திங்களன்று நடந்தது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துக்கொண்டார்.
 
பின்னர் அவர் பேசுகையில், ”காமராஜரை கல்வியின் தந்தையாக பார்க்கிறேன். பணம் படைத்தவர்களுக்கு போதும் என்ற மனம் கிடையாது, இன்னும் வேண்டும் என்ற மனம் தான் இருக்கும். தற்போது எம்.பி., எம்.எல்.ஏ. ஆகுவதற்கு கல்வி தகுதி தேவையில்லை. தேர்தலுக்கு முன்பு ரூ 300, ரூ500 என்று விட்டெறிந்தால் எம்பி எம்எல்ஏ ஆகிவிடலாம்.
 
காமராஜர் இல்லையென்றால் நாடு முன்னேறி இருக்குமா? கிராம பகுதி மக்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வெளியூர்களுக்கு சென்று கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். பணம் படைத்தவர்கள் மட்டுமே கல்வி அறிவு பெறமுடியும் என்ற நிலையை மாற்றி ஏழை எளியவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டவர் காமராஜர்.
 
நாடு சுதந்திரம் அடைந்தவுடன் உலக நாடுகள் நினைத்தது இந்தியாவில் பசி பட்டினி ஏற்பட்டு மக்களிடையே சண்டை ஏற்படும் என்று. ஆனால் காமராஜர், நேரு, இந்திராகாந்தி ஆகியோரால் உலக அரங்கில் முன்னேறி உள்ளோம். எம்பி, எம்எல்ஏ ஆக இருப்பதில் மரியாதை இல்லை.
 
ஒரு மாதம் மௌன விரதம் இருந்தேன். அரசியல் காரணமாகவே, முதன் முதலாக பங்கு பெறும் நிகழ்ச்சியாக ராஜீவ்காந்தி பெயருடைய பள்ளியில் காமராஜர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன். அரசியல் வேண்டாம் இந்த கிராம மக்களுடன் கழிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு உள்ளது” என்று கூறியுள்ளார்.