1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Modified: புதன், 8 மார்ச் 2017 (14:42 IST)

இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி!

கன்னட இலக்கிய உலகில் புகழ் பெற்ற கமலம்மா தாசப்பாவின் குடும்பத்தில், பழைய மைசூரில், நஞ்சன்கூடு பகுதியில்  வழக்கறிஞராக இருந்த பி.எம்.சிவராமையாவின் மகளாக, 1922 ஜனவரி 24ல் ராஜேஸ்வரி பிறந்தார். தனது பாட்டி கமலம்மா  நிறுவிய சிறப்பு ஆங்கிலப் பள்ளியில் அவரது ஆரம்ப கல்வி கழிந்தது.



பிறகு பெங்களூரு மத்தியக் கல்லூரியில் கணிதத்தில்  பி.எஸ்.சி ஹானர்ஸ் பட்டம் பெற்றார். தொடர்ந்து எம்.எஸ்.சி பட்டமும் பெற்றார். கல்லூரிப் படிப்பில் முதல்நிலை எடுத்ததால் அவருக்கு மும்முடி கிருஷ்ணராஜ உடையார் விருதும், எம்.டி நாராயண ஐயங்கார் பரிசும் வழங்கப்பட்டன.
 
இந்திய நவீன அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் சர்.சி.வி.ராமனை முதுநிலைப் பட்டம் படித்து முடித்த ராஜேஸ்வரி  சந்தித்து தன்னை இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் (ஐஐஎஸ்) ஆராய்ச்சியாளராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர் கணிதம் படித்திருந்ததால் ராமன் தவிர்த்துவிட்டார். இயற்பியலில் பட்டம் பெற்றவரே  தேவை என்றார் ராமன். ராஜேஸ்வரி மனம் தளராமல் அதே கல்வி நிறுவனத்தின் மின்னியல் துறையில் 1943ல் ஆராய்ச்சியாளராக இணைந்தார். பின் சாதனைகள் பல புரிந்தார்.
 
கர்நாடகத்தில் முதல் பெண் பொறியாளர் இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி ஆகிய பெருமைகளுக்கு உரிய அந்தப்  பெண்மணி ராஜேஸ்வரி சட்டர்ஜி. நுண்ணலைகள் (microwave engineering), உணர் பொறியியலில் (antennae  engineering) அவர் ஆராய்ச்சிகளை நிகழ்த்தி இருக்கிறார்.
 
ஐ.எஸ்.சில் வேறு (மின்னியல்) துறையில் சேர்ந்த அவர், அங்கு திறம்படப் பணியாற்றினார். அதன் விளைவாக வெளிநாடு  சென்று ஆராய்ச்சிப் படிப்பு பயில இந்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற்ற அவர் 1947ல் அமெரிக்கா சென்றார். 1949ல் நாடு  திரும்பிய ராஜேஸ்வரி, 8 மாதங்கள் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தேசிய தர நிர்ணய நிறுவனத்தில் வானொலி அதிர்வெண்  அளவீடுகள் (Radio Frequency Measurements) பிரிவில் செய்முறைப் பயிற்சிப் பெற்றார். 1952ல் மெக்ஸிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ராஜேஸ்வரி, மின்னியல் பொறியியலில் எம்.எஸ்.சி பட்டமும், அதே துறையில் பி.எச்.டி பட்டமும் பெற்றார். 1953ல் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின (ஐ.ஐ.எஸ்) மின்னியல் தொடர்பியல் துறையில் ஆராய்ச்சியாளராக  இணைந்தார். அங்கேயே பேராசிரியராக உயர்வு பெற்று 1982 வரை பணியாற்றிய அவர், மின்னியல் தொடர்பியல் துறையில்  தலைவராக ஓய்வு பெற்றார்.
 
1953 லேயே ஐ.ஐ.எஸ்.ல் பேராசிரியராகப் பணியாற்றி வந்த சிசிர்குமார் சட்டர்ஜியை, ராஜேஸ்வரி திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து நுண்ணலைப் பொறியியலில் (microwave engineering), ஆய்வுகள் நிகழ்த்தினர். இத்துறையில்  இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட முதன்மை ஆய்வுகள் அவை. மிக விரைவில் நுண்ணலை ஆராய்ச்சிக்கான ஆய்வகத்தையும்  அவர்கள் நிறுவினர். ஐ.ஐ.எஸ் ல் மின்காந்தவியல், மின்னணுக்குழாய் இணைப்புகள், நுண்ணலை பொறியியல் குறித்து அவர் பயிற்றுவித்து வந்தார். அவரது வழிகாட்டலில் 20க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் உருவாகினர். தனது பணிக்காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகளை வெளியிட்ட ராஜேஸ்வரி, நுண்ணலைகள், உணர் பொறியியலில் 6 நூல்களையும்  எழுதியுள்ளார்.
 
பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் அவர் தேர்வாளராகப் பணியாற்றியுள்ளார். பெண்கள் பள்ளி செல்வதே அரிதாக இருந்த காலத்தில், சமூகக் கட்டுப்பாடுகளை மீறி வெளிநாடு சென்று உயர்படிப்பு பயின்றதுடன், ஆண்கள்  மட்டுமே கோலோச்சிய அறிவியல் உலகில் எதிர்ப்புகளை மீறி நுழைந்து சாதனை படைத்தவர் ராஜேஸ்வரி சட்டர்ஜி.
 
ராஜேஸ்வரி - சிசிர்குமார் சட்டர்ஜி தம்பதியரின் மகளான இந்திரா சட்டர்ஜி. அமெரிக்காவில் தற்போது நவேடா  பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியலில் பேராசிரியராக உள்ளார். ராஜேஸ்வரியின் அறிவியல் பணிகளைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரிட்டனின் வானொலி பொறியியல் கழகம் மவுண்ட்பேட்டன் விருது வழங்கியுள்ளது. இந்திய பொறியாளர் சங்கம் ஜெகதீச சந்திர போஸ் விருது வழங்கி அவரைக் கௌரவித்தது. மின்னணுவியல்  மற்றும் தொலை தொடர்பியல் பொறியாளர் சங்கம், ராம்லால் வாத்வா விருதும், மேகநாத் சாஹா விருதும் வழங்கியது.
 
2010 செப்டம்பர் 3ந் தேதி ராஜேஸ்வரி காலமானார். (Elements of Microwave Engineering, Advanced  microwave engineering, Antenna Theory and Practice), உள்ளிட்ட அவரது நூல்கள் இத்துறையில்  முன்னோடி நூல்களாக விளங்கி ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவி வருகின்றன.