சப்த கன்னியர் என்பவர் யார்?; எங்கிருந்து தோன்றினர்...?
பராசக்தியின் கன்னி வடிவமான சப்த கன்னியர் வழிபாடு என்பது பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. பல இடங்களில் 7 செங்கல்லை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டு படையல் வைப்பதையும் பார்த்து இருப்பீர்கள். அவை யாவுமே 'சப்த மாதாக்கள்' எனப்படும் சப்த கன்னியர் வழிபாடுதான்.
பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி எனப் பெயர் கொண்ட சப்த மாதாக்கள் நம்முடைய எல்லா வேண்டுதல்களையும் விருப்பங்களையும் இன்றும் நிறைவேற்றிவருகிறார்கள். சக்தியின் அம்சமாக இவர்கள் தோன்றியதன் காரணம் என்ன, இவர்களின் சிறப்புகள் என்னென்ன என்பதை இங்கே காண்போம்.
பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித்தன்மை வாய்ந்த ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் உண்டாக வேண்டும் என்ற வரத்தை பிரம்மாவிடம் வேண்டி வாங்கினார்கள் சண்ட, முண்டர் எனும் இரு அரக்கர்கள். அவர்கள் எல்லோரையும் கொடுமை செய்தார்கள். அன்னை ஆதிசக்தியின் அருளைப் பெற்ற காத்தியாயன முனிவரையே கொடுமை செய்யத் துணிந்த நிலையில், பராசக்தி கொதித்தெழுந்து அசுரர் படையை அழிக்கக் கிளம்பினாள். அப்போது அசுரக் கூட்டத்தை ஒழிக்க தன்னிலிருந்து ஏழு கன்னியர்களை உருவாக்கினாள். சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, யமன் என ஒவ்வொருவரின் அம்சமாக உருவாகிய ஏழு கன்னியர்கள் அசுரக்கூட்டத்தை அழித்து, அன்னை பராசக்தியின் ஆசியைப் பெற்றனர்.
பூவுலகில் இந்த சப்த மாதாக்களும் மக்களை காக்குமாறு சிவபெருமானால் பணிக்கப்பட்டு, அவரின் அம்சமான வீரபத்திரரின் துணையோடு அருள்புரியத் தொடங்கினர். சிவாலயத்தில் பெரும்பாலும் இவர்கள் ஏழு பேரின் சிலைகளைக் காணலாம். ஆலயங்கள் மட்டுமல்ல, ஆற்றங்கரையோரம், ஏரி, குளம், ஊரின் எல்லைகள் என எங்கேயும் இவர்களின் சிலைகள் வழிபடும்விதமாக இருந்து வருகின்றன.
ரிக் வேதம், மார்க்கண்டேய புராணம், காளிதாசரின் குமார சம்பவம், விஷ்ணு தர்மோத்தர புராணம், தேவி பாகவதம் போன்றவற்றில் கன்னிமார்களின் விவரங்கள் கூறப்பட்டுள்ளன.