செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

திருமாலின் வாகனமாக கருடன் இருப்பது ஏன்...?

பறவைகளின் அரசனாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். திருமாலின் வாகனமாக இருக்கும் இவர், காசிபர்-கத்ரு தம்பதியினருக்கு மகனாவார். அமிர்தத்தை தேவலோகத்தில் இருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமை இவரை சாரும். 
விஷ்ணுவின் வாகனமாவதால் இவரை பெரிய திருவடி என்றும் அழைப்பதுண்டு. வாசுகி என்னும் பாம்பை பூணூலாகவும், கார்கோடகன் என்னும் பாம்பை மாலையாகவும், ஆதிசேசனை இடது கால் நகத்திலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை காதணிகளாகவும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும் அணிந்திருப்பவர் கருடன். ஒருவரை பாம்பு தீண்டி விஷம் ஏறினால் கருட வித்தியா மந்திரங்களை செபிப்பதன் மூலம் விஷ முறிவு ஏற்படும் என்று  கூறப்படுகிறது.
 
பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கையில் கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் பூர்த்தியடைகிறது.
 
வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அவன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். சில்பாமிருதம் என்ற நூலில் கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேக சமயத்தில்  இரட்டைக் கருடன் மேலே வட்டமிடுவது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு பெருமைகளையுடைய கருடனை தரிசிப்பதும் கருட பஞ்சமி  விரதத்தைக் கடைப்பிடிப்பதும் சகல பலன்களையும் தரும் என்பதில் ஐயமில்லை.