புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சக்தி வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்...!!

சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது. எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும். வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து  வழிபடலாம். 

குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால்  நிறைய பலன்களைப் பெறலாம். வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.
 
சக்தி வழிபாடு என்பது மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை ‘தாய்மை வழிபாடு” என்றே கூறினார்கள். உலகின் முதல் வழிபாடாக சக்தி  வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.
 
லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளாள்.  அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும்,  இடையூறும் வராது.
 
தமிழ் மாதமான ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது. அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி  அடைவாள்.