1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மீனாட்சியின் அருளை பெற்று தரும் பங்குனி மாதத்தில் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி...!!

வசந்த நவராத்திரி காலத்தில் அம்பிகையை வழிபட்டு, அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறுவோம். வசந்த நவராத்திரி - பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள் ஆகிய பிரதமை - தெலுங்கு வருடப்பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீ ராம நவமியுடன் முடியும்.

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது  சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பெரும்பாலான இடங்களில் மிக பிரசித்தமாகக் கொண்டாடப்படுவது சாரதா  நவராத்திரி எனும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியாகும்.
 
வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள். இரண்டு இரண்டு மாதங்களாக ருதுக்கள் அமையும். அந்த ருதுக்களில் 'ரிதூநாம் குஸுமாகர:' என்று  ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்த ருது. பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. வஸந்த ருதுவே வசந்த காலம். வாழ்வில்  வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம்.
 
நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில், வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும், ஒரு பட்சம் நாட்கள் அதாவது 15  நாட்கள் (அமாவாசை - பெளர்ணமி வரை) கொண்டாடுதல் - வேண்டும் வரங்கள் கிடைக்கச் செய்யும் என்றும், மண்டல நாட்கள் அதாவது பங்குனி அமாவாசை  முதல் சித்ரா பெளர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது ஸகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.
 
வசந்த நவராத்திரி அம்பிகையின் வடிவமாகிய ராஜசியாமளா அல்லது ராஜமாதங்கீஸ்வரி எனும் வடிவத்தைப் போற்றுவதாக அமையக் கூடியது. மதுரையில்  உறையும் மீனாட்சி - ராஜசியாமளாவாக விளங்குகின்றாள். மதுரை ஆலயத்திலும் வசந்த நவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
 
ஆலயங்களில் மேரு எனும் ஸ்ரீ சக்ர வடிவம் இருக்குமேயானால், அங்கு வஸந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரி வழிபாட்டால், பெண்களுக்கு குழந்தை பாக்கியம், கன்னியர்களுக்கு திருமண பாக்கியம், பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் போன்றவை கிடைக்கும்.