1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2016 (00:17 IST)

மகரம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

அறிவியல் பூர்வமாக எதையும் யோசிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எல்லாவற்றையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.


 

பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வீட்டில் கூடுதல் தளம் அமைப்பது, அறை கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். ஆனால் உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அடிக்கடி கோபப்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அலர்ஜி, சோர்வு, டென்ஷன், வீண் செலவுகள் வந்துப் போகும்.

வருடம் பிறக்கும் போதும் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் மறைமுக எதிர்ப்புகள், வீண் அலைச்சல், பழைய கடனை நினைத்த கவலைகள், எதிர்பாராத பயணங்கள் வந்துப் போகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை கால தாமதமின்றி செலுத்தப்பாருங்கள்.

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயைப் பார்க்கயிருப்பதால் எதிலும் ஒருவித குழப்பம், தடுமாற்றம், படபடப்பு, நெஞ்சு வலி, இரத்த சோகை, இளைய சகோதர வகையில் அலைச்சல், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துச் செல்லும்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் என்ன வாழ்க்கை இது? செக்கு மாட்டு வாழ்க்கை மாதிரி என்றெல்லாம் சின்னதாக ஒரு வெறுப்பு, சலிப்பு வந்துப் போகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளும், போராட்டங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். அடிமனதில் ஒருவித பயமும் வந்துப் போகும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போவது நல்லது. வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் முழு கவனம் செலுத்தப்பாருங்கள். சிலர் உங்களை தூண்டி விடுவார்கள். கொந்தளித்து வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள். பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கால் வலி வந்துச் செல்லும். அவசர முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவு வரக்கூடும். மனைவிக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். உங்களுடைய திறமைக் குறைந்து விட்டதாக நீங்களே சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம். மற்றவர்களால் நாம் ஒதுக்கப்படுகிறோமோ, நாம் மதிக்கப்படவில்லையோ என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கேள்விக் கேட்டு குழம்புவீர்கள். களவுப் போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேரிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு செல்வது நல்லது.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நீடிப்பதால் தன்னம்பிக்கை அதிகமாகும். அனுபவப்பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ம் வீட்டில் அமர்வதால் அவ்வப்போது ஏமாற்றங்களை உணருவீர்கள். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். உங்களுடைய பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள்.

14.12.2017 வரை சனி 11-ம் வீட்டான லாப வீட்டில் தொடர்வதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தடைப்பட்ட காரியங்களெல்லாம் முடிவடையும். வருமானம் உயரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். வெளிநாடு செல்ல விகா கிடைக்கும். புது வேலை அமையும்.

திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களில் உள்ள அர்த்தத்துடன் பேசுபவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால் வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான விரையச் சனி தொடங்குவதால் தூக்கமில்லாமல் போகும். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். ஆனால் தொழில் ஸ்தானமான 10-ம் இடத்தில் குரு செப்டம்பர் மாதம் முதல் அமர்வதால் பெரியளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடிரென்று பணியை விட்டு விலகுவார்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் வழக்கம் போல் முணுமுணுப்பார்கள். பகைத்துக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். ஜனவரி, அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் குரு உத்யோகஸ்தானமான 10-ல் அமர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். விரும்பத்தாக இடமாற்றமும் இருக்கும். உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள். சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளுடன் பணிந்துப் போங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள சற்று தாமதமாகி கிடைக்கும். சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களுடைய எதிர்பார்ப்புகளில் ஒரு சில நிறைவேறும். புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும். என்றாலும் தோலில் தடிப்பு, தேமல், தூக்கமின்மை வந்துச் செல்லும். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருசிலர் உங்களுடைய காதலைப் புரிந்துக் கொள்வார்கள்.

மாணவ-மாணவிகளே! தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். எல்லாம் தெரிந்தது தானே என்று இருந்துவிடாதீர்கள். விடைகளை எழுதி பாருங்கள். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டு பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களை கேட்டறிவீர்கள். யதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும்.

ஆகமொத்தம் இந்த 2017-ம் ஆண்டு சின்ன சின்ன இடையூறுகளையும், இன்னல்களையும் தந்தாலும் தன் சுய உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.