புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கிருஷ்ணர் விரும்பும் பவழமல்லி; ஏன் தெரியுமா...?

ஒருமுறை இந்திரன் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த பாரிஜாத மலரைக் கிருஷ்ணரிடம் கொடுத்தார். ஸ்ரீகிருஷ்ணனோ பாமாவிடம் கொடுத்துவிட்டார். இதைக்  கண்ட நாரதர் உடனே ருக்மணியிடம் போய் விஷயத்தை சொல்லி விட்டார். உடனே ருக்மிணி கோபமுற்றாள்.

ருக்மணியின் வேண்டுகோளை நிறைவேற்ற இந்திரனுடன் போரிட்டு பாரிஜாத மரத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்து ருக்மணியின் வீட்டில் ஊன்றினார். ஆனால் அந்த மரத்தில் பூத்த பூக்கள் அனைத்தும் பாமாவின் வீட்டில் விழுந்தது. ருக்மணிக்கு ஒரு பூ கூட  கிடைக்காமல் போனது. ஏனென்றால் ருக்மிணி கேட்டது பாரிஜாத மரத்தைத்தான், பூவையல்ல. பாரிஜாத பூவாவின் மற்றொரு பெயர் தான் பவழமல்லி.
 
புராண கதை:
 
இதற்கு வாயு புராணத்தில் மற்றொரு கதையும் உண்டு. அந்தக் காலத்தில் பவளமல்லிகா என்றொரு தேவதை இருந்தாளாம். அந்த தேவதைக்கு சூரியன் மீது  ஏற்பட்ட காதலை சூரியன் நிராகரிக்க, இதனால் மனம் வருந்திய பவள மல்லிகா, சூரியனுடன் கடும் கோபம் கொண்டு, இனிமேல் நீயிருக்கும் திசைக்கே  வரமாட்டேன் என்று கூறி பாரிஜாத பூவாய் உருமாறினாளாம்.
 
அதனால் தான் இன்றும் பவழமல்லியெனும் பாரிஜாதம் இரவில் நிலவொளியில் இதழ்விரித்து, நறுமணம் பரப்பி மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, சூரியன்  உதிக்குமுன்னமே, தனது கண்ணீரை பூக்களாய் சொரிந்து, உதிர்ந்து பூமியில் விழுந்து விடுகிறதாம்.
 
விஷ்ணுவிற்கு உகந்தது பவழமல்லி. இதன் வேரில் ஆஞ்சநேயர் குடியிருக்கிறார். எனவே தான் பெண்கள் இம்மலரை தலைக்கு சூடுவதில்லை. பாமா ருக்மணி  இருவருக்குமே இஷ்ட மலர் பவள மல்லி.
 
பொதுவாய் தரையில் விழுந்த மலரை சுவாமிக்கு சாற்றக்கூடாது. ஆனால் அந்த விதி பவளமல்லிக்கு பொருந்தாது. காரணம் விஷ்ணுவின் கருணை.
 
ஒருமுறை மதுரா பிருந்தாவனத்தில் கீழ் விழுந்த பவழ மல்லியை ராதை தொடுத்தது கொண்டிருக்க கிருஷ்ணர் பரிஜாத நறுமணத்தில் மயங்கி ராதை கோர்த்த பவளமல்லி மாலையை நுகர்ந்து தன் கழுத்தில் அணிந்து கொண்டாராம். அன்றிலிருந்து தரை தொட்ட பவழமல்லி இறை சூடும் மலரானது.