வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஆலயங்களில் கடவுளுக்கு செய்யும் அபிஷேகத்தின் பலன்கள்...!

ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த 12 வகை திரவியங்களை எள் எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு  பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.
நம் மூதாதையர்கள் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு  அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.
 
எந்த கடவுளுக்கு, எந்தெந்த திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதனால் மக்களுக்கும், இந்த உலகுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.
 
நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த  மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை  வெளிப்படுத்தும்.
 
அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுகிறது.
 
அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும்.  அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில்  வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள்  சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
 
ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி  நடைபெறும்.
 
குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்  என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.