1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 2 மே 2022 (14:27 IST)

அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது எப்படி...?

அட்சய திருதியை நாளன்று அதிகாலை எழுந்து நீராடி, பூஜையறையில் அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.


கோலம் போட்டபின் அதன்மேல் ஒரு பலகை வைத்து அதில் கோலமிடுங்கள். அதில் வாழை இலையை போட்டு, அதன் நடுவே பச்சரிசியை பரப்பி, அதன்மேல் செம்பில் நீர் நிரப்பி, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து, அதை சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக அமைத்திடுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள்.

லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோரது படங்களில் ஒன்றை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். பின்னர் காமாட்சி விளக்கு அல்லது குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து குங்குமம் இட்டு வாழையிலையில் வலப்பக்கம் வையுங்கள்.

நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். முதலில் விநாயகரை மனதார வேண்டி கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்து தூப தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும்.

அன்றைய தினம் மாலையில் கலசத்துக்கு மீண்டும் தூப தீப ஆராதனையை காட்டி, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம்.

அட்சய திருதியை நாளில் பயன்படுத்திய அரிசி, கலச தேங்காயை அடுத்த வெள்ளிக்கிழமையில் பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம்.

அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது விட முக்கியமானது.