புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

கோடையை சமாளிக்க பானங்கள் மற்றும் தவிக்க வேண்டிய உணவுகள்...

கோடை காலம் தவிர்க்க முடியாதது; ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும். கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது.


எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், சாறாக எடுத்துக் கொள்வதை விட, சுவைத்து சாப்பிட்டால், அதன் பலன் இரட்டிப்பாகும். கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். எலுமிச்சைப் பழமும், தேனும் அல்லது சர்க்கரை, உப்பும் கலந்து அருந்தினால் தாகம் அடங்கும். நுங்கு சாப்பிடலாம். சுத்தமான மோரில் உப்பு போட்டு, அதிக அளவு அருந்தலாம்.
 
கோடையில் தோல் நோய்கள், அரிப்பு, நமைச்சல், படை, சொறி, சிரங்கு போன்றவை அதிகமாக ஏற்படும். அச்சமயத்தில்,  குளிக்கும் போது, கடலை மாவு, பயத்தம் மாவு, முடிந்தால் சந்தனம், வெட்டிவேர் இவற்றைக் கலந்து பொடித்து, உடல்  முழுவதும் தேய்த்துக் குளிக்க வேண்டும். 
 
ஈரமான ஆடைகளை அணியக் கூடாது. உடல் ஈரத்துடனும், ஆடைகள் அணியக் கூடாது. கோடை காலத்தில் பருத்தி  ஆடைகளே சிறந்தது.
 
காலை, மாலை இரண்டு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து  தலை குளிப்பது நலம் பயக்கும்.
 
ஒருநாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, மறுநாள் காலை தலைக்கு பூசி குளித்து  வந்தால், குளிர்ச்சியாக இருக்கும்.
 
இளநீர், மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். அவ்வாறு இருப்பவர்கள், அவற்றுடன் சிறிது மிளகுத் தூளை  சேர்த்துக் கொண்டால் போதும். எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
 
கோடையில் மஞ்சள் காமாலை நோய் மற்றும் அம்மை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, மோருடன் கீழாநெல்லியை அரைத்து, கலந்து, காலை வேளையில், வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
 
இதேபோல், மூலநோய் உள்ளவர்களும் கோடை காலத்தில் மிகவும் சிரமப்படுவர். இவர்கள் மாங்காயில் உள்ள பருப்பை  அரைத்து, மோரில் கலந்து சாப்பிடலாம். அத்திப்பழம் நிறைய சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.
 
முள்ளங்கி, காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, வெள்ளைப் பூசணி, சவ்சவ், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற  நீர்காய்களை சாலடாக மிளகுத் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
 
கோடை காலங்களில் கனரக ஆலைகளில், வாகனங்களில் பணிபுரிவோருக்கு உடல் அதிக உஷ்ணம் அடைந்து, அநேக  பிரச்னைகள் ஏற்படும். இதற்கு சீரகம், வெந்தயம் இரண்டையும் சேர்த்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, மோரில் கலந்து  சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியடையும்.
 
காலையில் கம்பு, சோளம், ராகி கூழ் அல்லது கோதுமை, பார்லி ஆகிய கஞ்சி வகைகளை எடுத்துக் கொள்வது  ஆரோக்கியமானது.