வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

தினமும் ஒரு கொய்யா எடுத்து கொண்டால் என்ன பயன் தெரியுமா?

உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வது அவசியமாகும். உணவு விஷயங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. எங்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கும் கொய்யா பழத்தை அலட்சியமாக நினைக்காதீர்கள். இதில் நிறைந்துள்ள சத்துக்களைப் படித்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

 
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள்  நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.
 
குழந்தைகளுக்கு
 
கொய்யாப் பழத்தைச் சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு, பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு, வெறும் சதையை எடுத்து  அரைத்து, அதனுடன் தேவையான அளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, தோசையாக வார்த்துக் கொடுக்கலாம். குழந்தைகள் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
 
தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. சிறிய பழங்களாக இருந்தால், மூன்று சாப்பிட முடியும் எனில் நல்லதுதான் என்றாலும் கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம்  போன்றவை அதிகமாகி தலைசுற்றல் ஏற்படலாம்.
 
கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.
 
சருமத்துக்கு மிகவும் நல்லது கொய்யா. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும். தோல் சுருக்கத்தைக்  குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
 
நீரழிவு நோயாளிகளுக்கு
 
நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.  மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும்.
 
தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.