பழனி முருகன் ஆண்டி கோலம் உணர்த்தும் தத்துவம் பற்றி...
நாரதர் தேவலோக மாங்கனியைக் சிவனாரிடம் கொடுத்து அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்ததுமே, ஞானக்குழந்தைகளான கணபதி, முருகன் இருவரும் சட்டென்று தங்களுக்கே உரியது என்றார்கள்.
ஈசன் சிந்தித்தார், உங்களில்உலகை முதலில் சுற்றி வருபவர் யாரோ, அவருக்கே இந்த பழம், அப்புறம் போட்டியில் வென்றவர்கள் யாரோ அவருக்கே இது சொந்தம் எனக் கூற, உலகை சுற்ற வேண்டும் என்றாலும், ஈசன் படைத்த ஏழு உலகங்களையும் வலம் வர மயிலேறி புறப்பட்டார், முருகன். கணபதியோ, எல்லா உலகங்களையும் தன்னுக்குள்ளே அடக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவசக்தியை சுற்றி அம்மையப்பனை வலம் வந்து, கந்தன் வரும்முன்பே கனியை பெற்றுக் கொண்டார் கணபதி.
கந்தன் வந்தார், அண்ணன் கையில் கனியைக் கண்டார். அது எப்படி அவருக்கு கிடைத்தது என்பதை தெரிந்து கொண்டார். உமா மகேஸ்வரனே உலகங்கள் அனைத்தும் என்ற உண்மை தனக்கு தெரியாமல் போனதை ஒரு கணம் எண்ணினார். அதற்கான காரணத்தை ஆராய்ந்தார், அண்ணன் கணபதி பிரணவ வடிவம், ஞானஸ்வரூபன், அவரிடமே இதற்கு காரணம் கேட்டார்,
அனைத்து உலகங்களையும் அம்மையப்பனில் காணும் ஆற்றல் விநாயகருக்கு இருந்தது, தவத்தின் பலனாய் பெற்ற ஞானம்தான் அந்த ஆற்றலுக்கு காரணம் என்பதை உணர்ந்து பூலோக தவக் கோலமே பழனியாண்டி ரூபம்.
அண்ணனைப் போலத் தானும் தவமியற்றி, ஞானஸ்கந்தனாக விரும்பியதன் விளைவே அந்த ஆண்டி வேடம். சூரனை அழிக்கும் வீர சக்தியுடன் சிவனாரின் நெற்றிக்கண்ணில் உதித்த குமரன், ஞானக்கடவுளாகி, ஞாலத்தை காக்க எடுத்துக் கொண்ட பற்று அற்ற திருக்கோலம் பழநி ஆண்டிக் கோலம், "கனி கிடைக்கவில்லை" என்ற கோபத்தில் ஆண்டியாகவில்லை. தன்னை வழிபடுவோர்க்கு எல்லாம் அதனை வழங்குவதற்காக விரும்பி, ஏற்றுக் கொண்ட வடிவமே அந்த பரதேசி வடிவம். கந்தனின் தவம் தொடங்கியது. பிரணவம் அவருள் அடங்கியது, ஞானம் அவர் மூச்சாயிற்று. அழகும் அறிவும் அவருள் ஒளிவீசியது.