1. ஆன்மிகம்
  2. »
  3. ஆன்மிகம்
  4. »
  5. தலங்கள்
Written By Webdunia

தொண்டை மன்னனுக்குக் காட்சி கொடுத்த திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர்!

வடதிருமுல்லைவாயில் திருக்கோயில் மிகப் பழமையானது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பதிகம் பெற்ற திருத்தலம். 10-ம் நூற்றாண்டு முதல் 15 -ம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இத்தலத்து இறைவன் புகழை அருணகிரிநாதர், மாதவச் சிவஞான யோகிகள், வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், இரட்டைப் புலவர் முதலியோர் பாடியுள்ளனர். இத்தலத்தைப் பற்றி புலவர் மயிலை சண்முகம் பிள்ளை புராண காவியம் இயற்றியுள்ளார்.

வட திருமுல்லைவாயிற் புராணம் இவர் பாடிய நூல்களுள் பெரியது. இது தவிர இவர் பாடியளித்த சிற்றிலக்கியங்கள் சிலவும் உள்ளன. வடதிருமுல்லைவாயிற் புராணம் 23 படலங்களைக் கொண்டது. இதில் 1,458 பாடல்கள் உள்ளன.

"மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் வணங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே" எனத் தாயுமானவர் கூறியாங்கு 3 முதல் 5 வரையுள்ள படலங்கள் தலவிசேடம். தீர்த்த விசேடம், மூர்த்தி விசேடம் பற்றி எடுத்துரைக்கின்றன.

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த தொண்டமான் வழிபடு படலமும் இந்த பாடலில் உள்ளது. திருமுல்லைவாயில் பெருமானின் லிங்கத் திருமேனியைக் கண்டவன் இந்த தொண்டைமான். பெருமானுக்கு முதலில் திருக்கோயில் அமைத்தவன். கருவறை, மகா மண்டபம், பட்டி மண்டபம், நிருத்த மண்டபம், அலங்கார மண்டபம், கல்யாண மண்டபம் முதலியவற்றை அமைத்தான். நித்திய பூசைகளும், விழாக்களும் தவறாமல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவன் தொண்டை மன்னன்.

இம்மன்னன் வழிபட்டதைச் சுந்தரமூர்த்தி நாயனார் தனது பாடலில்,

"சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச
சூழ்கொடி முல்லையால் கட்டிட்ட
எல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்ட
அருளிய இறைவனே"

என்று குறிப்பிடுகிறார்.

நைமிசப் படலம

நைமிசக் காடு இமயமலைச் சாரலில் உள்ளது. இது, முனிவர்கள் தவம் செய்வதற்கு ஏற்ற இடமாகும். இக்காடு புராணங்களின் பிறப்பிடமாய் இருந்தது.

ஒரு காலத்தில், முனிவர்கள் பிரம்மதேவனிடம் சென்று "உலகத்தில் தவம் செய்வதற்குச் சிறந்த இடம் யாது?" என்று வினவினர். அப்பொழுது பிரமதேவன், ஒரு தருப்பைப் புல்லைச் சக்கரமாக அமைத்து, அதனை உலகில் உருட்டி, "இச்சக்கரத்தின் பின் நீங்கள் செல்லுங்கள்; அது எங்குப் போய் நிற்கிறதோ, அந்த இடமே தவம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்" என்றார். பிரமன் விடுத்த அந்தச் சக்கரம் நைமிசக் காட்டில் வந்து நின்றது. சக்கரத்தை "நேமி" என்று வடமொழியில் கூறுவர். எனவே, இந்தக் காடு "நைமிசக் காடு" எனப்பட்டது. இக்காடு, இமயமலைச் சாரலில் இருப்பதோடு, கங்கை நதிக் கரையிலும் அமைந்துள்ளது.

நைமிசக் காட்டில் வாழ்ந்த முனிவர்களுள் சூதமாமுனிவர் தலைசிறந்தவர். அவரே புராணங்கள் பலவற்றையும், முனிவர்களுக்கு அருளிச் செய்தவராவார். திருமுல்லைவாயில் புராணத்தை அருளிச் செய்தவரும் அவரேயாவார். நைமிசக் காட்டில் அமர்ந்து தவம் செய்வோரை இது சிவபெருமானிடம் கொண்டு செலுத்தும் ஆற்றல் உடையது.

அவர்களுடைய பிறவியைப் போக்கவல்லது; சைவ நெறியை நிலைநிறுத்த வல்லது; அன்பினால் நெஞ்சத்தை உருக்க வல்லது; ஆணவம், கன்மம், மாயைகளை முழுமையாய் நீக்க வல்லது. காமம் முதலிய குற்றங்களைக் கருகச் செய்ய வல்லது; மற்றும் இதன் புகழைக் கேட்பவர்ளை உயர்த்தவல்லது. இக்காடு வளம் செறிந்திருந்தது. இதில் வாழ்ந்த விலங்குகளும் பகைமை மறந்து வாழ்ந்தன.

நைமிசக் காட்டில் தவம் செய்யும் முனிவர்கள் திருநீறையும் கண்டிகையையும் (உருத்திராக்கம்) அணிந்து பொலிவோடு விளங்கினர். அவர்கள் சிவபெருமானைத் தவிர வேறு தெய்வங்களை வணங்காதவராய் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் கண்ணுவர், சதாநந்தர், முற்கலர், விபாண்டகர், உக்கிர சீலர், போதாயனர், கபிலர், சௌனகர் ஆவர்.

இம்முனிவர்களைக் காண்பதற்கு ஒரு முறை சூதமா முனிவர் வந்தார். அவர் வியாசரிடம் பதினென் புராணங்களைக் கேட்டுணர்ந்தனர். அவர் திருமேனியில் சிவ சாதனங்கள் பொலிந்தன. கையில் கமண்டலமும் யோக தண்டமும் விளங்கின. அவருடைய நா, திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டிருந்தது.

நைமிசக் காட்டு முனிவர்கள் சூதமா முனிவரை எதிர்கொண்டு வரவேற்றுப் பல உபசாரங்களைச் செய்தனர். பிறகு ஒரு வேண்டுகோளையும் அவர் முன் வைத்தனர். "தவமே உருவான முனிவரே! முன்பு சிவபெருமானைக் குறித்த பல புராணங்களை எங்களுக்கு அருளிச் செய்திருக்கிறீர். கயிலை, காசி, காஞ்சி, சிதம்பரம், திருக்கழுக்குன்றம் போன்ற பல புராணங்களை எடுத்துரைத்தீர். அத்தகு சிறப்புடைய வேறொரு தலத்தின் பெருமையை இன்று எங்களுக்கு அருளிச் செய்ய வேண்டுகிறோம்" என்றனர்.

அவ்வேண்டுகோளைக் கேட்ட சூதமா முனிவர் சிவபெருமான் திருவடிகளை நினைத்துக் கொண்டு வடதிருமுல்லைவாயில் புராணத்தைச் சொல்லத் தொடங்கினார். "முனிவர்களே! வட திருமுல்லைவாயில் என்று ஒரு தலம் உள்ளது. அதன் புராணச் சிறப்புகளை யான் அறிந்த வகையில் உங்களுக்குச் சொல்கிறேன். வடதிருமுல்லைவாயில் ஒரு சிறந்த தலமாகும். அது மும்மலத்தை ஒழிக்க வல்லது. அத்தலத்தின் பெயரை நாவினால் ஓதுவோர் யாவராயினும் சிவபெருமானைச் சென்றடைவர். அத்தலத்தில் தங்குவோர் பல பேறுகளைப் பெறுவர்.

தவசிகள் தாம் செய்கின்ற வேள்விகளின் பயனைப் பெறுவர். தவறு செய்பவர்கள் தம் வினைகள் நீங்கப் பெறுவர். இத்தலச் சிறப்புகளைக் கேட்பவர்கள் துன்பங்களிலிருந்து நீங்குவர். சூரியன் முதலிய ஒன்பது கோள்களும் அவர்களுக்கு இசைவாக அமைந்து, வேண்டியவற்றை வேண்டியவாறே அளிக்கும்.

புராண வரலாற்றுப் படலம

கயிலைமலை தூய்மைக்கு இருப்பிடமானது; மணியில் ஒளிபோலப் பிரகாசம் உடையது. அது சிவபெருமானின் திருவுருவைப் போலக் காட்சி தருவது. அதாவது அதன் உச்சியில் கங்கைநீர் பாய்கிறது. அதனருகில் வானத்தின் வெண்பிறை தவழுகிறது. அடிவாரத்தில் மான் கூட்டங்கள் உள்ளன. அந்த மலையில் சிவபெருமான் அம்பிகையோடு என்றும் இனிது வீற்றிருக்கிறார்.

ஒரு சமயம் அப்பனை நோக்கி அம்பிகை, "மகாதேவா! இவ்வுலகம் நீரில் மூழ்கிப் போகின்ற பிரளயகாலத்தில் அழியாமல் நிற்கக் கூடிய ஓரிடத்தைக் கூறுக" என்று கூறினார்.

இறைவன் அதற்குப் பின்வருமாறு விடையளித்தார் : "ஊழிக்காலத்தில் அழியாமல் இருப்பதும், எனக்கு மகிழ்ச்சி தருவதும் ஆகிய தலம் ஒன்று உள்ளது. அது ஸ்ரீசைலம், சிதம்பரம், திருமறைக்காடு, திருஒற்றியூர், காஞ்சி, திருவிடைமருதூர், காசி, கோகர்ணம், மயிலாடுதுறை, வெள்ளிமலை, திருக்கழுக்குன்றம், பழமலை, திருவண்ணாமலை, திருவானைக்கா, திருக்காளத்தி, திருவெண்காடு, சீர்காழி, திருச்சாய்க்காடு, திருவையாறு, சீதளபுரம், சடானனம், குடந்தை, சூரியனார் கோயில் முதலியவற்றை விடச் சிறந்தது. அத்தலம் பிரளயத்தின் போது அசையாமல் இருப்பதனால் அதற்கு "ஸ்திரநகர்" என்று பெயர் வந்தது. அதனைச் "சித்திகேந்திரம்" என்றும் அழைப்பர்.

அத்தலத்தில் தங்கி வாழ்பவர்களுக்கு அது மனக் கிளர்ச்சியையும் மங்கலத்தையும் தருவதனால் அதற்குக் "கல்யாணமாபுரம்" என்றும் பெயர் உண்டு. கிருத யுகத்தில் பிருகு முனிவருக்கு இரத்தினங்களைக் கொடுத்ததனால் அந்நகர் "அரதனபுரம்" ஆயிற்று திரேதாயுகத்தில் அதற்குக் "கூவிளத் (வில்வத்) திருமலிவனம்" என்று பெயர். துவாபர யுகத்தில் "சண்பக வனம்" எனப் பெற்றது. இக்கலியுகத்தில் "திருமுல்லைவாயில்" (மாலதி வனம்) என வழங்கப்படுகிறது.

அத்தலத்தில் இறப்போர் எம் உருவத்தை (சாரூபத்தை) எளிதில் பெறுவர். இது அத்தலத்திற்குரிய தனிச்சிறப்பாகும். மற்றும் முருகனும், வசிட்டரும் பிறரும் அங்கு வந்து வழிபடுவர்" என்றார்.

இவ்வாறு கூறிய சிவபெருமானிடம் நந்தி தேவரும், வானவர்களும், முனிவர்களும், மகிழ்ச்சி மிக்கவராய் இறைவனிடம் வந்து திரண்டனர். பெருமானும், கயிலை மலையை விட்டு, அம்பிகையோடு மற்றவரும் புடைசூழ நந்தி தேவர் மீதமர்ந்து திருமுல்லைவாயில் நகரை வந்தடைந்தார்.

"கந்தன் இத்தலத்தை வழிபடும்போது தெளிந்த நீரைக்கொண்ட பொய்கை ஒன்றை உண்டாக்குவேன். பின்னர், இந்திரன் அப்பொய்கையைப் புதுப்பிப்பான். அது மங்கலவாவி என்று வழங்கப் பெறும்" என்று எம்பெருமான் கூறினார்.

"பிரதோஷ காலத்தில் அன்புடன் வந்து தரிசிப்பவர் நம்மை வந்து அடையும் தகுதி பெறுவர். மற்றும் சனிப் பிரதோஷத்தில் ஆயிரம் முல்லை மலர் கொண்டு அருச்சித்து வழிபடுவோர் எமது உருவம் பெற்று, உலகோரால் போற்றப் பெறுவர்"என்று கூறிய பின், எம்பெருமான் விடையிலிருந்து இறங்கி, "உமையே! இங்கே இருக்கின்ற லிங்கத்தில் நாம் மறைந்திருப்போம்; நீயும் எம்முடன் உறைவாயாக!" என்றார்.

அப்போது உமையானவள், "மாமணியே! நான் ஒரு வரம் பெற விரும்புகிறேன். அருள்புரிக! இந்நகரத்தில் தங்கி பக்தியோடு வழிபடுவோர்க்கு உம் திருவடிப் பேற்றை அருள வேண்டும். இதுவே என் விண்ணப்பம்" என்றார். எம்பிரானும் அதற்கு "அவ்வாறே ஆகுக!" என்று கூறினார். பிறகு இருவரும் லிங்கத்தில் மறைந்தருளினர்.

இவ்வாறு லிங்கத்தில் மறைந்த நாள் வைகாசி மாதம், பௌர்ணமி, கடக ராசி, விசாக நன்னாளாகும். (இந்நாளில் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது) இவ்வாறு சூதமா முனிவர், மற்ற முனிவர்களுக்கு தான் வியாசரிடம் கேட்டறிந்தவற்றைக் கூறினார்.

தல விசேடப் படலம

சூதமா முனிவர் மேலும் சொன்னார் : "சிவபெருமான் பெருமையைப் பேசும் புராணங்கள் பத்து. அவை:-

1. கந்த புராணம
2. வாமன புராணம
3. மச்ச புராணம
4. வராக புராணம
5. மார்க்கண்ட புராணம
6. லிங்க புராணம
7. பௌடிக புராணம
8. பிரம்மாண்ட புராணம
9. சைவ புராணம
10. கூர்ம புராணம் ஆகியன.

இவற்றுள் பௌடிக புராணத்தின் சிவகேந்திர காண்டத்தில் மார்க்கண்ட சங்கிதையின் நடுவில் திருமுல்லைவாயிலின் பெருமை பேசப்படுகிறது. அதில் தெரிவித்துள்ளவற்றை சூதமா முனிவர், மற்ற முனிவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

தீர்த்த விசேடப் படலம

வடதிருமுல்லைவாயில் திருக்கோயிலின் கீழ்த்திசையில் முதன்மையான ஒரு தீர்த்தம் உள்ளது. அதற்கு "மானத தீர்த்தம்", "குகனருந்தடம்", "அயிராவத தீர்த்தம்", "இஷ்டசித்தி தீர்த்தம்", "மங்கல தீர்த்தம்", "அரதனத் தடம்", "சிவஞான தீர்த்தம்", "பிரம தீர்த்தம்" என்று பல பெயர்கள் உள்ளன.

இத்தீர்த்தத்தில் வைகாசி பௌர்ணமி மற்றும் மாசி மகத்தில் வெள்ளிக்கிழமைகளிலும், மாசி மாத திங்கட்கிழமைகளிலும் நீராடி இறைவனை வழிபடுவோர், உலக நலங்கள் பலவற்றையும் பெறுவர்.

மகா சிவராத்திரி, மாத சிவராத்திரி, பிரதோஷ நாட்கள், சித்திரைப் பௌர்ணமி முதலிய புண்ணிய தினங்களில் நீராடினால் இக, பர சுகங்கள் இரண்டையும் பெறுவர்.


மூர்த்தி விசேடப் படலம

தொல்பதியாகிய இந்த வடதிருமல்லைவாயில் திருக்கோயிலில் வழிபடுவோர் எவர்க்கும் பரமுத்தியைக் குறைவின்றி அருளும் பொருட்டு இறைவன் பாம்பை அணியாகக் கொண்டு வீற்றிருக்கின்றான். (இன்றும் லிங்கத்துடன் நாகாபரணத்தைக் காணலாம்.)

பிரமன் விழாப் படலம

பிரமன் ஒருமுறை வடதிருமுல்லைவாயிலுக்கு வந்து, குமர வாவி (குகனருந்தடம்) யில் நீராடி போதாயன முறையில் கலசத்தைத் தாபித்து அம்மை, அப்பருக்குத் திருமுழுக்காட்டி அருச்சனைகள் செய்து விழா எடுத்துப் பலவாறாகத் துதித்தான். இறைவன் திருக்காட்சி நல்கி, பிரமனுக்கு வேண்டிய வரங்களை அளித்தான்.

குமர நாயகன் வழிபடு படலம

சிவபெருமான், தனது மைந்தனாகிய முருகனை அழைத்து, "நீ பூவுலகம் சென்று சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழித்து வா" என்று அனுப்பினான்.

இந்த ஆணைக்கிணங்க முருகன் வடதிருமுல்லைவாயில் வந்து மனத்தால் ஒரு குளத்தைத் தோற்றுவித்து நீராடி, அம்மையப்பரை வழிபட்டான். இறைவனும் வேல் முதலிய ஆயுதங்களைக் கொடுத்து முருகனை, போருக்கு அனுப்பினான்.

முருகப் பெருமான் அரக்கர்களை அழித்துத் தேவர்களின் துன்பங்களை நீக்கினான். தெய்வானையையும், வள்ளிப் பிராட்டியையும் மணந்து, திருத்தணிகையில் வீற்றிருந்தான்.

பிருகு முனிவர் தவம் செய் படலம

பிருகு முனிவர் திருப்பருப்பதம், திருக்காளத்தி, வாரணவதம் ஆகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, வடதிருமுல்லைவாயிலுக்கு வந்து, தம் துன்பங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக கடும் தவம் செய்தார்.

இறைவன் அம்பிகையோடும் தோன்றி, அவர் விரும்பியபடியே, என்றும் தம்மிடமிருந்து பக்தி செய்யும் பேற்றினை அளித்தான்.

வரத்தைப் பெற்ற முனிவர் மேலும் இவ்வாறு வேண்டினார் : "இந்த முல்லை நகரின் பக்கத்தில் பஞ்சம் வரலாகாது. ஒருக்கால் வருமாயின், நான் அன்னதானம் செய்து அதனைப் போக்கும்படியாக அருள்புரிய வேண்டும்" இறைவனும் அருள்கூர்ந்து ஒரு நாழிகைப் பொழுது இரத்தின மழையைப் பொழிவித்தான். இறையருளால் பெற்ற மாணிக்கக் குவியல்களைப் பிருகு முனிவர், முருகப் பெருமான் தோற்றுவித்த வாவியுள் பதித்து வைத்தார்.

ஒரு காலத்தில் கடுமையான பஞ்சம் வந்தது. பிருகு முனிவர், இறையருளால் பெற்ற மாணிக்கக் குவியல்களைக் குளத்திலிருந்து எடுத்து, அனைவருக்கும் உணவளித்தார். பஞ்சமும் நீங்கியது.

பஞ்சம் தீர்ந்த பிறகு, பிருகு முனிவர் அரனிடம் முக்தி பெற்றார். மணி மழைபெய்த காரணத்தால் இவ்வூருக்கு "மணி நகர்" என்னும் பெயர் வழங்கலாயிற்று. முன்னமே வைத்திருந்து, வேண்டியபோது மணிகளை எடுத்த காரணத்தால் இத்தடாகம் "மணிமலர்த் தடாகம்" எனப் பெற்றது.

சந்திரன் கழுவாய்ப் படலம

ஒரு காலத்தில் சந்திரன் தேவகுருவான வியாழனிடம் கல்வி கற்றான். குரு, இந்திரனைக் காணச் சென்றபோது, தன் மனைவியைப் பாதுகாக்கும் பணியைச் சந்திரனிடம் ஒப்படைத்துச் சென்றார். வியாழன் மனைவியாகிய தாரை, ஊழ்வினைப் பயனால் சந்திரனைக் கண்டு காமுற்றாள். சந்திரன் மறுத்தும், அவள் தன் இச்சையை நிறைவேற்றிக் கொண்டாள். திரும்பி வந்த வியாழன் இதனை அறிந்து சந்திரனுக்கு க்ஷயரோகம் உண்டாகும்படி சபித்தான்.

சந்திரன் தன் நிலைமையை விளக்கிச் சாபவிமோசனம் வேண்டினான். வியாழன் மனம் இரங்கி "திருமுல்லைவாயில் சென்று மானதத் தீர்த்தமாடி இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும்" என்றான். சந்திரனும் அவ்வாறே திருமுல்லைவாயில் சென்று, இறைவனை வழிபட்டுச் சாபவிமோசனம் பெற்றான்.

கதிரவன் துயர் நீங்கு படலம

தக்கனின் வேள்வியில் கலந்து கொண்டு, கண்ணிழந்த சூரியன் புண்ணிய வசத்தால் ததீசி முனிவர் கூறிய அறிவுரைகளை நினைக்கலானான். அசுவினி முதலான விண்மீன்களும், சந்திரனும், வடதிருமுல்லைவாயில் இறைவனைப் பூசித்து நற்கதியடைந்ததைப் போலத் தானும் தன் துயரத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணி வடதிருமுல்லைவாயிலை அடைந்து, குளத்தில் நீராடி, இறைவனைப் போற்றி வழிபட்டான்.

இறைவனும், அம்பிகையோடு எழுந்தருளி, சூரியனுக்குக் காட்சி கொடுத்து, "உன் பாவம் போகும், அஞ்சாதே; நீ மற்ற சூரியர்களுக்குத் தலைவனாவாய்; ஐம்பூதங்கள் அழியும்போது வீடுபேற்றை அடைவாய்" என்று அருள் புரிந்தான்.

சூரியன் ஆனந்தக் கடலில் மூழ்கினான். இறைவனைப் பலவாறு போற்றி வழிபட்டான். தன் பெயரால் ஒரு தடாகத்தை உண்டாக்கினான். எம்பெருமான் திருவடியை வணங்கி விடைபெற்று மேலுலகம் சென்று அங்குள்ள சூரியர்களுக்குத் தலைவனாகச் சிறப்புற்றான்.

குசலவர் பூசனைப் படலம

இராமனின் மைந்தர்களாகிய குசலவர் இருவரும், தாம், தம் தந்தையின் தம்பியரைப் போரில் தோற்கச் செய்து அதனால் பெரும் பாவச் செயலைச் செய்ததாக வருந்தினர். அப்பாவத்தைப் போக்கிக் கொள்ள வடதிருமுல்லைவாயில் சென்று அங்குள்ள இறைவனை வழிபட இசைவு தரும்படிப் பெற்றோரை வேண்டினர். அவர்களும் இசைந்தனர். அவ்விருவரும் அயோத்தியை விட்டு வடதிருமுல்லைவாயிலை அடைந்தனர்.

முல்லையில் அரதனத் தடாகத்தில் நீராடி, திருக்கோயில் சென்று இறைவனை வழிபட்டனர். மற்றும் அப்பெருமான் உறையும் இடத்துக்கு வடபக்கம், மேற்குத் திசையை நோக்கி ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இறைவனும் காட்சி கொடுத்து, "உங்கள் பாவங்கள் அழிந்துவிட்டன; உங்கள் துன்பங்கள் தொலைந்தன; இனி நீங்கள் அயோத்திக்குச் சென்று அரசாண்டு எம் திருவடிகளைச் சேர்வீர்; நீர் எம்மை இங்கு வழிபட்டதனால், இந்நகர் "குசலவபுரம்" என்று வழங்கும்; எம்மையும் "குசலவபுரேசர்" என்று அழைப்பர்" என்று கூறி உமையோடும் மறைந்தருளினார். பின்பு இராமனின் மைந்தர்கள் இருவரும் அயோத்தி சென்றடைந்தனர்.

துருவாசப் படலம

துருவாச முனிவரின் சாபத்தைப் பெற்ற இந்திரன், மிக வருந்தினான். பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டினான். குருவாகிய வியாழனும், நிலைமையை உணர்ந்து இந்திரனுக்காகப் பரிந்து பேசி, கழுவாய் உரைக்கும்படி வேண்டினான். துருவாசரும் மனம் இரங்கித் "திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரரை வணங்கினால், உனக்குச் சாபம் நீங்கும். உன்னுடைய செல்வமும் மீண்டும் உன்னை வந்து சேரும்" என்று உரைத்தார். இந்திரனைப் போலவே அவரது வாகனமான ஐராவதுமும் முனிவரை வேண்டியது. திருமுல்லைவாயில் சென்று வழிபட்டு சாபம் நீங்குமாறு துருவாசர் கூறினார்.

தேவையில்லாத, வேண்டத்தகாத இந்த நிகழ்ச்சிகள் நடந்து விட்டனவே என்று துருவாசர் தம் குடிலில் அமர்ந்து எண்ணிப் பார்த்தார். அமைதியை நாடினார். அவர் சீற்றம் தணிந்தது. பிறகு தாமே திருமுல்லைவாயிலுக்குச் சென்று மானதவாவியில் நீராடி இறைவனை வழிபட்டார். அதனால் அவருடைய கவலைகள் நீங்கின.

துருவாசர் திருமுல்லைவாயிலில் வழிபட்டு வரும்போது ஓராண்டு சித்திரைத் திங்கள், சித்திரை நட்சத்திரம் பௌர்ணமியன்று இறைவன் காட்சி கொடுத்தான். அந்நன்னாளில் வழிபடும் மற்றவர்களுக்கும் துன்பத்தைப் போக்க வேண்டும் என்று துருவாசர் இறைவனை வேண்டி வரம் பெற்றார். பின்னர் தம் குடிலுக்குத் திரும்பினார்.

இந்திராணி பூசனைப் படலம

இந்திரன் சாபத்திற்குள்ளானதைத் தொடர்ந்து, தனது கணவனைக் காணாமல் இந்திராணி மிகவும் வருந்தினாள். இதனால் கௌரி தேவியை நோக்கி தவமிருந்தாள். அப்போது தோன்றிய உமையவள், கயிலையை விட சித்தியும், முக்தியும் தரும் தலமாகிய திருமுல்லைவாயிலுக்குச் சென்று தவமிருந்து வழிபடுமாறு கூறினாள்.

அவ்வாறே இந்திராணி திருமுல்லைவாயில் வந்தடைந்தாள். அங்குப் பன்னிரெண்டுஆண்டுகள் அம்பிகையைப் பூசித்தாள். பூசனையைக் கண்டு மகிழ்ந்த உமையவள், நிமலன் அருளால், உன்னுடைய கணவனை அடைவாய் என வரம் அளித்தாள். இந்திராணி அகம் மகிழ்ந்தாள்.


இந்திரன் விழாப் படலம

துருவாசர் இட்ட சாபத்தின் விளைவாகத் தாமரைத் தண்டில் ஒளிந்திருந்த இந்திரன் வெளியே வந்து மாசிலா மணீசுவரரைத் தொழத் தொடங்கினான். ஐராவதத்தையும் தேவர்களையும் வரவழைத்துக் கொண்டான். தாமரைக் குளத்து நீரை எடுத்து ஐராவதத்தின் மேல் வைத்துக் கொண்டு பௌர்ணமி நன்னாளில் இறைவனுக்கு நீராட்டி, முல்லைப் பூக்களைக் கொண்டு அருச்சனை செய்தான். ஐராவதமும் இறைவனுக்கு நீரைச் சுமப்பதோடு வேறுபல பணிகளையும் பக்தியோடு செய்து வந்தது. இந்திராணியும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டாள்.

தேவர்கள், தேவமாதாக்கள். முனிவர்கள் முதலானோர் புடைசூழ இந்திரன் வலம் வந்து பல தோத்திரப் பாடல்களையும் பாடினான். மாசிலா மணீசுவரரும், இந்திரன் செய்த பூசைகளுக்கு மகிழ்ந்தவராய் அவன் முன் தோன்றி, வேண்டிய வரம் கேட்பாயாக என்றார்.

உன் திருவடியை இடைவிடாது நினைக்கின்ற பெரும் பேற்றினைத் தருக, என்று இந்திரன் வேண்டிப் பெற்றுக் கொண்டான். மேலும் தான் ஒளிந்திருந்த தடாகத்திற்கு இந்திரவாவி என்னும் பெயரும், இத்திருநகருக்கு திருமுல்லைவாயில் என்னும் பெயரும் அமைய வேண்டும் என்றும் வேண்டினான். சிவபெருமானும் இந்த வரங்களை அருளிச் செய்து மறைந்தார்.

தொண்டைமானுக்கு அருட்காட்சி

சோழநாட்டின் வடதிசையில் இருந்த கோட்டங்களுக்குத் "தொண்டைநாடு" என்று பெயர். "சோழநாடு சோறுடைத்து" என்பது போல, தொண்டைநாடு "சான்றோரை உடைத்தாய்" இருந்தது. அதன் தலைநகரம் காஞ்சி மாநகரம் ஆகும்.

தொண்டை நாட்டுக்கு வடதிசையில் முரடர்களாகிய குறும்பர்கள் இருந்தனர். அவர்கள் உடல்வலிவு மிக்கவர்கள். ஆனால் தீய ஒழுக்கம் கொண்டவர்கள். அவர்கள் சிறு தெய்வத்தை அதாவது வைரவரை வழிபடுபவர். வன்முறையால் மற்றவர்கள் பொருளைச் சேர்த்துக் கொண்டனர். பெரிய அரண்களைக் கட்டிக் கொண்டனர். மற்றவர்கள் இவர்களைத் தாக்கும்போது இந்த அரண்களில் போய் ஒளிந்து பதுங்கிக் கொள்வர்.

வெள்ளெருக்கால் தூண்களைக் கொண்டு பெருமதில்களை அமைத்துக் கொண்டு கொடுங்கோலாட்சி செய்து வந்தனர். தொண்டை நாட்டைச் சேர்ந்த புழல் கோட்டத்துள் நுழைந்து அடிக்கடி அங்குள்ள மக்களுக்குத் துன்பம் விளைத்து வந்தனர். ஓணன் என்றும் வாணன் என்றும் அவர்கள் அழைக்கப்பட்டனர்.

அவர்களுடைய அடாத செயல்களுக்கு ஒரு முடிவுகட்டி, அடக்கி வைக்கும் நோக்கத்தோடு, மன்னன் தொண்டைமான் ஒருமுறை காஞ்சியிலிருந்து படையுடன் கிளம்பினான். திருமுல்லைவாயில் வந்தபோது மாலை நேரமாகிவிட்டதால், இரவு அங்கு தங்க வேண்டியதாயிற்று.

இரவு உணவுக்குப் பின் தொண்டைமான் உறங்கச் சென்றான். நேரம் நடுநிசி நெருங்குவதாக இருந்தது. எங்கும் அமைதி நிலவியது. அந்த வேளையில் நெடுந்தொலைவில் வடகிழக்குத் திசையிலிருந்து ஒரு மணி ஓசை கேட்டது. அது தொலைவிலுள்ள சிவன் கோயிலின் அர்த்தசாம பூஜையின் மணி ஓசையாக இருக்கலாம் என்று அரசன் எண்ணினான்.

பொழுதுபுலர்ந்த பின், மன்னன் தொண்டைமான் இதுகுறித்து தன் அமைச்சர்களைக் கேட்டான். அவர்கள் அந்த மணிஓசை, குறும்பர்களின் அரணிலிருந்து வந்ததாகும் என்று சொன்னார்கள். தொண்டைமான் தன் பயணத்தைத் தொடரலானான்.

தொண்டைமான் படையுடன் வருகிறான் என்னும் செய்தியைத் தெரிந்துகொண்ட குறும்பர்கள், படையைத் திரட்டிக்கொண்டு போர் செய்யலாயினர். முதலில் தொண்டைமான் படைகளின் கடுமையான தாக்குதலுக்கு ஆற்றாதவராய்க் குறும்பர்கள் பின்வாங்கித் தம் அரணுக்குள் ஒளிந்து கொண்டனர். ஆனால், சிறிதுநேரம் கழித்து, வைரவனின் உதவியால் பெற்ற பூதத்தின் துணைகொண்டு மீண்டும் போர் செய்யலாயினர். இம்முறை தொண்டைமான் படைகள் பின்வாங்கின.

அதோடு, இனிமேல் போர் செய்ய இயலாது என்னும் நிலையும் வந்தது. தொண்டைமான் போரை நிறுத்தி விட்டுப் பாசறைக்குத் திரும்பினான்.

திரும்பி வரும்போது, மன்னன் ஏறி வந்த யானையின் கால்கள் முல்லைக்கொடியினால் தடுக்கப்பட்டன. யானை தன்காலைப் பெயர்த்து வைக்க இயலாததாகி விட்டது. நடை நின்றுவிட்டது. மன்னன் யானையின் நிலையைக் கவனித்து, உணர்ந்து கொண்டான். யானைமேல் அமர்ந்தபடியே முல்லைக்கொடிப் பிணைப்பில் வாளை வீசினான்.

அரசன் வீசிய வாள், அக்கொடியை அறுத்துவிட்டது. ஆனால் அந்த இடத்திலிருந்து குருதி (இரத்தம்) பீறிட்டு வரலாயிற்று. குருதியைக் கண்ட மன்னன் திடுக்குற்று யானையிலிருந்து இறங்கி அந்த இடத்தை விலக்கி ஆராய்ந்து பார்த்தான். அங்கு இறைவன் திருஉருவாகிய லிங்கத்தைக் கண்டான்.

சிவலிங்கத்தைக் கண்ட மன்னன், வியப்புற்றுத் தளர்ந்து தரையில் வீழ்ந்தான்; எழுந்து புரண்டான். ஆராத பெரும் பக்தி உணர்வோடு, "நான் என்ன நினைத்து என்ன செய்துவிட்டேன்" என்று பலமுறையும் கூறிக் கொண்டு வியர்த்துப் போனான். கண்ணில் நீர் பெருகியது. இறைவனைத் தழுவினான்; மயங்கினான்; புலம்பினான்.

பிறகு, ஒருவாறு ஓய்ந்து, அமைதியாக மனதுக்குள்ளே எண்ணலானான். "நான் அரசன் என்பதால், உலக மக்கள் சிறியேனை தண்டிக்க முன் வர மாட்டார்கள்; அதனால் இப்பாதகச் செயலுக்குக் கழுவாய் செய்ய இயலாமல் போகும். தீ வினையேன் ஆகிய நான், இனி, வாள்கொண்டு என்னை நானே வீழ்த்திக் கொள்வதுதான் செய்யத் தக்கதாகும். இதுவே, இந்த நிலையில் செய்யக்கூடிய நற்செயலாகும்.

இதைத் தவிர வேறு ஏதும் செய்யக்கூடியது இல்லை. இதுவே உய்யும் நெறி" என்னும் முடிவுக்கு வந்தான். உடனே, தன் உடை வாளை உருவினான்; கழுத்தில் வைத்து அரியத் தொடங்கினான். அந்நொடியில் மாதேவன் வானத்தில் தோன்றி, மன்னனுக்கு உரைக்கலானான்: "மைந்தனே, நிறுத்து, குருதி வந்ததை எண்ணி வருந்தாதே. என்றும் நாம் குற்றமுடையேம் அல்லேம். எந்நாளும் "மாசிலாமணி" ஆவேம். எனவே வருந்தற்க" என்று கூறிக்கொண்டே விடையிலிருந்து இறங்கி, உமையவள் வலப்பக்கம் வர, நந்தியும் தேவர்களும் இடப்பக்கம் வர, தொண்டைமான் மன்னனுக்கு காட்சி கொடுத்தார். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.

அரசனும் துயர் நீங்கி, மிக மகிழ்ந்தவனாய்ப் பலவாறு போற்றித் துதிக்கலானான். இறைவன் மீண்டும், "ீ, நந்தியின் துணையுடன் மறுபடியும் போர் செய்து வெற்றி பெறுவாயாக" என்று கூறிக்கொண்டே தன் அருளுருவை மறைத்துக் கொண்டார்.

தொண்டைமான் மிக மகிழ்ந்தவனாய் நந்தியும் உடன் வர, படையுடன் சென்று குறும்பர்களைத் தாக்கி எளிதில் வெற்றி பெற்றான். அவர்களுடைய அரண்களை அழித்து அவற்றில் இருந்த வெள்ளெருக்கந் தூண்களையும், மற்ற பொருள்களையும் எடுத்துக் கொண்டு திருமுல்லைவாயிலை அடைந்தான்.

திருமுல்லைவாயிலில், "எல்லையில் இன்பம் பெறும்படி வெளிப்பட்டு அருளிய" இறைவனுக்குத் திருக்கோயிலை எழுப்புவதற்காகத் தலைநகராகிய காஞ்சியிலிருந்து பொன்னையும், பொருளையும், ஆட்களையும் (தச்சர்களையும்) வரவழைத்தான். மாசிலாமணீசுவரருக்கும், கொடியிடை நாயகிக்கும் கருவறைகளை எழுப்பினான்.

அப்பன் கருவறை முன், வெள்ளெருக்கந் தூண்களைக் கொண்டு மண்டபம் எழுப்பினான். மகா மண்டபம், பட்டி மண்டபம், நிருத்த மண்டபம், அலங்கார மண்டபம், கல்யாண மண்டபம் முதலியவற்றையும் அமைத்தான். குறும்பர்களின் அரணிலிருந்து கொண்டு வந்த வேல்பிடித்த வைரவனைக் காவலாய் அமைத்தான். பரிவார தேவர்களுக்குச் சுற்றாலயமும், மதிலையும் எழுப்பினான்.

தொண்டைமானின் தமயன் மாசிலாமணீசர் கருவறைக்கு வடக்கில், (கிழக்கு நோக்கிய) ஒரு இலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

மக்கள் என்றும் தொழுவதற்காகவும், நித்திய பூஜைகளும், விழாக்களும் தவறாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்பாடுகளைச் செய்தான். பலகாலம் நல்லாட்சி புரிந்து இறுதியில் இறைவன் திருவடியைச் சேர்ந்தான்.

புலவர் மயிலை சண்முகம் பிள்ளை - அறிமுகம

மயிலை சண்முகம் பிள்ளை சென்ற நூற்றாண்டுப் புலவர் (1858 - 1905). இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி. தமிழ் இலக்கிய இலக்கணங்களில் சிறந்த புலமையாளர். ஏட்டுச் சுவடிகளைப் பரிசோதிப்பதில் நிபுணராய் இருந்தார். சிற்சில நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார். ஐம்பெருங் காவியங்களுள் ஒன்றாகிய மணிமேகலையை முதன் முதலாக (1894) அச்சுக்குக் கொண்டு வந்தவர் இவரே. இந்நூல் தவிர நன்னூல் - விருத்தியுரை, தஞ்சைவாணன் கோவை, மச்ச புராணம், சிவ வாக்கியர் பாடல், மாயப் பிரலாபம் என்பவை இவரால் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.