செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (15:59 IST)

திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிக்கணுமா.? ஆன்லைனில் டிக்கெட் பெற தேதி அறிவிப்பு..!!

tirupathi crowd
வரும் மே மாதத்திற்கான அனைத்து வகையான தரிசன டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களின் வெளியீட்டு தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் வெளிட்டுள்ளனர்.
 
மே மாதத்திற்கான ஸ்ரீவாரி சிறப்பு 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் கோட்டா வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
 
தங்கும் அறைகளுக்கான கோட்டா டிக்கெட்டுகள் அதே நாளில் மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் ஏராமான தங்கும் விடுதிகள் உள்ளன. திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசம் மற்றும் ரயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணுவாசம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்களுக்கான அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
 
மேலும் பத்மாவதி விருந்தினர் மாளிகை, வெங்கடேஸ்வரா விருந்தினர் மாளிகை, ராம் பகீச்சா வராஹஸ்வாமி ஓய்வு இல்லம், டிராவலர்ஸ் பங்களா, நாராயணகிரி விருந்தினர் மாளிகை, நந்தகம், பாஞ்சஜன்யம், கௌஸ்துபம், வகுல்மாதா, சப்தகிரி குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவையும் திருமலையில் உள்ளன.
 
பக்தர்கள் தாங்கள் தங்குவதற்கு இந்த அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் மின்னணு லக்கி டிப் பதிவு வரும் 18 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இதில் கல்யாணோத்ஸவ, ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவ சேவை, சஹஸ்ர தீபாலங்கார சேவை, சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை சேவைகளுக்கு பக்தர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
 
perumal samy
லக்கி டிப் முடிவுகள் வரும் பிப்ரவரி 20ம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் பிப்ரவரி 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாணோத்ஸவ, ஆர்ஜித பிரம்மோத்ஸவ, ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீபாலங்கர ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் வெளியிடப்படுகிறது.
 
அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு முன்பதிவு அன்றைய தினம் அதாவது 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான முன்பதிவு செய்யப்பட்ட தரிசனம் மற்றும் தங்கும் அறைகளின் ஒதுக்கீடு பிப்ரவரி 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
 
ரத சப்தமி விழாவை முன்னிட்டு திருமலையில் மூன்று நாட்களுக்கு சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்யப்படுகிறது. ரத சப்தமி நாளில் விஐபி பிரேக் தரிசனம் மற்றும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம், மற்றும் கை குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசனங்கள் ஆகியவையும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.