முட்டம் சகல புனிதர்கள் ஆலயம்: நூற்றாண்டை கடந்து வரலாற்று பயணம்
முட்டம் சகல புனிதர்கள் ஆலயம் சென்ற வருடம் தனது 100-வது ஆண்டு விழாவை கொண்டாடி தற்போது 101 வது ஆண்டு விழாவை கொண்டாட தயாராக உள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 23 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. நவம்பர் 1-ஆம் தேதியே அகில உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் சகல புனிதர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
முட்டம் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கடற்கரை கிராமம். பாறைகள் நிறைந்த கடல், நீண்ட கடற்கரை, பாறையில் வந்து வந்து முட்டும் கடல் அலைகளின் இனிமையான தாலாட்டு ஓசைகள், மேடு பள்ளமான நில அமைப்புகள், செம்மண் அகழிகள், வானுயர்ந்த கலங்கரை விளக்கம், வரலாற்று சிறப்புமிக்க சகல புனிதர்கள் ஆலயம் என ஒரு அழகு குவியலாகவே காட்சியளிக்கிறது.
குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் முட்டம் கடற்கரைக்கும் சகல புனிதர்கள் ஆலயத்துக்கும் வந்து தரிசிக்காமல் போக மாட்டார்கள் அந்த அளவுக்கு அனைவரையும் முதல் பார்வையிலே ஈர்க்கும் வசியம் கொண்டது தான் இந்த முட்டம்.
முட்டம் சகல புனிதர்கள் ஆலயம் நூற்றாண்டு பெருமை கொண்ட பழமையான எழில் மிகுந்த ஆலயம். கி.பி 1914-ல் நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் இது. இதன் சுற்று வட்டார பகுதிகளிலும் சரி உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ பகுதிகளிலும் சரி ஏதாவது ஒரு புனிதரை மட்டுமே தங்கள் ஆலயத்துக்கு பாதுகாவலராக கொண்டிருப்பார்கள் ஆனால் இந்த முட்டம் தேவாலயம் அனைத்து புனிதர்களையும் பாதுகாவலராக கொண்டு சகல புனிதர்கள் ஆலயம் என பெயர் பெற்று நிற்பதே இதன் சிறப்புகளில் முதன்மையான ஒன்று. இந்த ஆலயத்தை ஆங்கிலேயர்கள் சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டியால் கட்டியதாக கிராம மக்களால் கூறப்படுகிறது.
ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் வெளியே செல்லவே அனுமதிக்காத ஒரு அமைதியை மனதிற்கு தரும் அதன் அமைப்பு. மர வேலைபாடுகளுடன் நுனுக்கமான அழகியலுடன் இந்த ஆலயத்தின் தூயகம் அமைந்துள்ளது. அதன் இடது புறத்தில் தந்தையாம் கடவுளும் அவர் அருகே மகனாகிய இயேசுவும் அவர்கள் மேலே பரிசுத்த ஆவியானவரும் புறா வடிவில் இருக்க அவர்களை சுற்றி அனைத்து புனிதர்களும் அணிவகுத்து நிற்கும் அற்புதமான ஓவியங்களும் அமைந்துள்ளது. வலது புறத்தில் இயேசுவின் பாடுபட்ட சுரூபமும் அவர் அருகே அன்னை மரியாள் நிற்பதும் அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே ஆங்காங்கே பல புனிதர்களின் திரு சுரூபங்களும் அமைந்துள்ளது.
ஆலயத்தை சுற்றி இயேசுவின் சிலுவை பாதை ஸ்தலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வளாகத்தின் ஓரத்தில் திவ்ய நற்கருணை அமைந்த மௌன மடம் என்று மக்களால் அழைக்கபடும் பகுதி உள்ளது. இங்கு கிராம மக்கள் பலர் நேரம் காலம் பார்க்காமல் சென்று அமைதியாக திவ்ய நற்கருணையின் முன்பு தியானித்து, மன அமைதி பெற்று வருகின்றனர்.
சகல புனிதர்கள் ஆலயத்தின் பக்கவாட்டில் உள்ள முற்றத்தில் வானுயர்ந்த மணிக்கோபுரம் உள்ளது, அதன் உச்சியில் கிறிஸ்து அரசரின் பிரம்மாண்ட சிலை உள்ளது. அதன் அருகில் அன்னை மரியாளின் சிற்றாலயம் போன்று கெபி ஒன்று அமைந்துள்ளது, மாலை வேளையில் ஆலயத்தை சுற்றியுள்ள பெண்கள் மற்றும் பலர் அங்கு சென்று செபமாலை படிப்பது வழக்கம்.
கத்தோலிக்க திருச்சபையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி சகல புனிதர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. முட்டம் சகல புனிதர்கள் ஆலயத்திலும் தங்கள் பாதுகாவலர்களான சகல புனிதர்கள் தினம் இதே நாளிலே கொண்டாடப்படுகிறது. பத்து நாடகள் தொடர்ந்து நடக்கும் ஆலய ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகள், ஆடம்பர கூட்டுத்திருப்பலி, நற்கருணை ஆராதனை என வெகு விமரிசையாக நடைபெறும்.