பரமசிவனாரின் தேரை முறித்த விநாயகப் பெருமான்

 
Sasikala|
திரிபுர சம்ஹார நிகழ்வு:
 
திரிபுர சம்ஹார நிகழ்வு சிவபுராணம், லிங்க புராணம், ஸ்காந்த புராணம் போன்ற புராணங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

 
 
திரிபுரர்கள் என்று அழைக்கப்பட்ட மூன்று அசுரர்கள் கடும் தவத்தால் பறக்கும் தன்மை கொண்ட மூன்று கோட்டைகளை பெற்று இருந்தனர். தவ வலிமையால் கிடைத்த அரிய சக்திகளால் அசுரர்களின் கொடுமைகள் எல்லை கடந்த நிலையில், தேவர்கள் இறைவனிடம் தங்களைக் காத்து அருளுமாறு வேண்டி நின்றனர். தேவர்கள் பிரார்த்தனைக்கு செவிசாய்த்த இறைவனும் திரிபுரர்களை அழித்தருளும் திருவுள்ளம் கொண்டனர். 
 
நான்கு வேதங்கள் புரவிகள் ஆக, சூரிய சந்திரர்கள் சக்கரங்கள் ஆக, நான்முகன் சாரதியாக, அனைத்து தேவர்களும் போர் கருவிகள் கொண்டு, ஆலம் உண்ட சிவபெருமான் திருத்தேரில் எழுந்தருளினார். ஈசன் ஆணையைப் பெற்று நான்முகன் தேரை செலுத்த எண்ணிய தருணம் தேர் சக்கரங்கள் அச்சு முறிந்து பயணம் தடைப்பட்டது. 
 
முப்பத்து முக்கோடி தேவர்களும் இறைவன் எழுந்தருளிய திருத்தேர் முறிந்த விபரீத நிகழ்வின் காரணம் அறியாமல் பதைபதைத்து நின்றனர். சிவபெருமான் புன்முறுவலுடன் 'விநாயகக் கடவுளை வணங்காது புறப்பட்ட காரணத்தால் இந்நிகழ்வு நடந்தேறியது' என்று பிரமனுக்கு குறிப்பால் உணர்த்தி அருளினார். தேவர்கள் தவறை உணர்ந்த அத்தருணம், விநாயகப் பெருமான் இறைவனின் திருக்கரங்களில் கோடி சூர்ய பிரகாசமாய் எழுந்தருளினார். 
 
நான்முகனும் அனைத்து தேவர்களும் விநாயகரை பணிந்துப் போற்றித் துதித்தனர். திரிபுர சம்ஹாரம் விக்கினம் இன்றி நிகழ ஆசி வேண்டி நின்றனர். கருணையே வடிவான கணபதியும் அவர்களுக்கு ஆசி வழங்கி அருளினார். 
 
இறைவன் தான் வகுத்து அருளிய நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை ஆன்மாக்கள் உணர்ந்து உய்யும் பொருட்டு தானே நடத்தியும் காட்டி அருள்கின்றான். 
 
இதனால்தான் எந்த ஒரு நற்காரியங்கள் தொடங்கும் முன் முதலில் விநாயகர் வழிபாடு செய்த பிறகுதான் தொடங்குவார்கள். சமயங்கள் போற்றி மகிழும் ஆனைமுகக் கடவுளின் ஆசி பெற்று தொடங்கப்படும் செயல்கள் யாவும் இனிதே நிறைவுறும்.


இதில் மேலும் படிக்கவும் :