இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பொது பல சேனாவும் போட்டி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பொது பல சேனாவும் போட்டி
Last Modified செவ்வாய், 30 ஜூன் 2015 (05:28 IST)
இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில் கடும்போக்கு பௌத்த அமைப்பாக கருதப்படும் பொதுபல சேனா போட்டியிடவுள்ளது.

இது குறித்த முடிவை தமது அமைப்பு எடுத்துள்ளது என்றும், யாருடனும் இணைந்து போட்டியிடாமல் தனித்தே போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன எனும் பெயரில் தமது அமைப்பு போட்டியிடும் எனவும் அவர் கூறினார்.

இலங்கையில் நிலவும் தேசியப் பிரச்சினைகள் குறித்து தயக்கமின்றி நாடாளுமன்றத்தில் பேசக் கூடிய நபர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதே தமது அமைப்பின் நோக்கம் எனவும் அவர் கூறுகிறார்.

நாட்டில் பெரும்பான்மை கட்சிகள் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயல்படுகின்றன, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை; அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தவறுகளைச் செய்கின்றனர் எனும் குற்றச்சாட்டுக்களையும் பொதுபல சேனா முன்வைத்துள்ளது.

இலங்கையை அழிவுப் பாதையிலிருந்து மீட்பதற்காகவே தமது அமைப்பு தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது என ஞானசார தேரர் கூறுகிறார்.

சிங்கள, பௌத்தக் கட்சிகள் எனக் கூறிக் கொள்ளும் கட்சிகள் தமது மக்களுக்காக எதையும் செய்யவில்லை, ஆனால் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் தமது சமூகங்களின் நலன்களை கருதி கடுமையாக செயல்பட்டு வருகின்றனர் எனவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :