வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மகாளய அமாவாசை பூஜைகள் மிகவும் விஷேசமாக செய்வதற்கான காரணங்கள் என்ன...?

அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்துமுடிக்கும்வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு, தர்ப்பணம் செய்துமுடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.
அமாவாசை நாட்களில் அசைவ உணவு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. அன்று காகத்துக்கு சாதம் வைத்த பின்னரே நாம் உணவருந்த வேண்டும். கோதுமைத் தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்கவேண்டும்.
 
ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒரு ராசிக்குள் பிரவேசிக்கிறார். ராசிச் சக்கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின்  பிரவேசம் நிகழும்போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம்  முன்னோர், பிதுர்லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். 
 
சூரியன் கன்னி ராசிக்குள் புகுந்ததும், பித்ருக்கள் விடுதலையாகி தங்கள் உறவுகளை நாடி வீடுகளுக்கு வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே ‘மகாளய பட்சம்’ என்பர். ‘பட்சம்’ என்றால் 15 நாட்கள்’எனப் பொருள். மகாளயம் என்றால் கூட்டமாக வருதல். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாகக் கூடும் காலமான 15 நாளே  மகாளய பட்சம். சிலசமயங்களில் 16 ஆக மாறுபடும்.
 
இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். இந்தப் பதினைந்து நாள்கள் புரட்டாசி மாதப் பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய  அமாவாசை எனப்படும்.
 
மூன்று தலைமுறை தந்தைவழி, தாய்வழி முன்னோரையும் நினைத்துத் தீர்த்தக்கரைகளுக்குச் சென்று புனித நீராடி, நம் முன்னோர்  ஆத்மசாந்திக்காக வழிபாடு செய்ய வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, பொருளாதாரத்தில் பின்தங்கிய  மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து உதவலாம்.