தமிழ் மாதமாகிய ஆனி மாதத்தின் சிறப்புகள்...!!
உத்திராயணப் புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி. இது தேவர்களின் மாலைப் பொழுது என்கிறது சாஸ்திரம். மேலும் ஆனிமாதம் இளவேனிற் காலம். கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசும்.
இம்மாதத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் மஹாவிஷ்ணு எடுத்த கூர்ம அவதாரம் நிகழ்வு ஆனி மாதத்தில் தான் நடத்துள்ளது.
ஆனி மாதம், உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். அதேபோன்று வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஆனி கேட்டை நட்சத்திரத்தில் திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.
சில கோயில்களில் ஆனி பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதைக் காணலாம். அந்த வகையில் திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல் (விமானம்) திறந்த வெளி கொண்ட கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும். கூடை கூடையாக மாம்பழங்களை அம்மன்மீது அபிஷேகிப்பார்கள். பிறகு அந்த மாம்பழங்களை பர்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.
இதேபோன்று திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் ஆனி பௌர்ணமி அன்று ஸ்ரீ தாயுமானவ சுவாமிக்கு வாழைப் பழத்தார்கள் சமர்ப்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள். பூஜைகள் நிறைவு பெற்றதும் அர்ச்சகர், அந்த வாழைப்பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி, மாங்கனித் திருவிழா நான்கு நாள்கள் நடைபெறும். ஆனி பௌர்ணமியன்று சுவாமியும் அம்பாளும் வீதிவுலா வரும் போது காரைக்கால் அம்மையார் திருவுருவச் சிலையையும் தரிசிக்கலாம். அப்போது பக்தர்கள், மாடி வீடுகளில் ஏறி மாடியின் மேல்புறத்தில் நின்று கொண்டு மாம்பழங்களை கூடைகூடையாக சுவாமி ஊர்வலத்தின் மீது அபிஷேகிப்பார்கள்.
தமிழகத்தில் சில கோயில்களில் ஆனி பௌர்ணமியையொட்டி, தெப்பத்திருவிழா நடைபெறும். அந்த வகையில் மன்னார்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.