1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிறப்பான கிருத்திகை வழிபாடுகளும் பலன்களும் !!

27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. 

ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.
 
கந்தனை வளர்க்க சிவபெருமான் கார்த்திகை பெண்களான அறுவரை நியமித்தார். கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே  இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.
 
சிவனின் வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள்,  அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம்.
 
தண்ணீர் மட்டும் அருந்தி முருகப்பெருமானின் மந்திரங்கள், முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம், தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல்  வேண்டும். மாலையில் வீட்டில் முருகனுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம். கோவிலுக்கு செல்லலாம்.