1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது.

பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது. 
 
வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும்.
 
சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம்  கொண்டுள்ளது.
 
சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள்  உள்ளன.
 
நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன.
 
சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.
 
திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது.
 
இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன்,  பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி  ஆகியோர் சிலைகள் உள்ளன.
 
புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான். அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார்.
 
தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப் பார்க்க முடியும்.