1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2024 (08:22 IST)

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – சிம்மம்!

GuruPeyarchi 2024
எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.


 
இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் சூழ்ந்திருந்த பிரச்னைகள் விலகி தெளிவு பிறக்கும். குறிக்கோளை சுலபமாக அடைவீர்கள். பணக் கஷ்டம் நீங்கும். பொதுக்காரியங்களில் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள்.

தாய் வழி உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேர்ந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டாகும். போட்டியாளர்களின் சதிகளை தவிடுபொடியாக்கி விடுவீர்கள்.

அதேநேரம் அவ்வப்போது உடல் உபாதைகள் தோன்றி மறையும். குறிப்பாக வயிறு, தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். அதனால் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும்.

மற்றபடி உங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். சட்டப் பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்வீர்கள். வம்பு, வழக்குகளை விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு முடித்துக்கொள்வீர்கள். உங்களைப் பற்றி வீண் புரளி சொல்பவர்களிடமிருந்து விலகி இருப்பீர்கள். உங்களின் நுண்ணிய அறிவால் புதிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். தனிப்பட்ட முறையிலும், கூட்டுத் தொழிலிலும் நல்ல நிலை ஏற்படும்.

உங்களின் தெய்வ நம்பிக்கை பலப்படும். பிறரைச் சார்ந்து செய்து வந்த காரியங்களை தனித்துச் செய்து பெருமையடைவீர்கள். போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உற்றார், உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும்.

இந்தக் காலகட்டத்தில் வீட்டைப் பழுது பார்ப்பது போன்ற காரியங்களை செய்ய வேண்டாம். ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன் துறைகளில் அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. அவசியமில்லாத பயணங்களைத் தவிர்க்கவும். அதோடு முக்கிய முடிவுகளை உயர்ந்தோரின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். உடல் ஆரோக்யம்,மன நலம் சீராக யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். இந்தக் காலகட்டத்தில் ராசியிலுள்ள குரு பகவானால் உற்சாகமாக செயல்படுவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். ஆனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பினால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகலாம். மற்றபடி முயற்சி மேற்கொண்டால்தான் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலன் அடைவீர்கள். அதேநேரம் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். புதிய திட்டங்களை செயல்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவர்வீர்கள்.

Simmam

 
அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உங்களின் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். அதேநேரம் தொண்டர்கள் உங்களை சிறிது அலட்சியப்படுத்துவார்கள். எனவே அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும்.

கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் பாராமுகத்தால் வேதனை அடைவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே அவர்களிடம் எந்தக் கோரிக்கையையும் எடுத்துச் செல்ல வேண்டாம். மற்றபடி பொறுப்புடனும், பொறுமையாகவும் நடந்துகொண்டு செயல்படவும்.

பெண்மணிகள் இந்த குருப் பெயர்ச்சியில் கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவரின் அன்பைப் பெறவும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்த வாய்ப்பு உண்டாகும்.

மாணவமணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனவே படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம்.

மகம்:
இந்த குருப் பெயர்ச்சியில் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில்  சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

பூரம்:
இந்த குருப் பெயர்ச்சியில் புதிய வீடு,  மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள்  அன்னியோன்னியமாக இருப்பர்.

உத்திரம்:
இந்த குருப் பெயர்ச்சியில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க  வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். 

 
பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். “எருக்க மலரை” சிவனுக்கு அல்லது கணபதிக்கோ அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் கோமாதாவிற்கு அமவாசை தோறும் அகத்திக்கீரையும் கொடுக்கலாம். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்கும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட கல்: மாணிக்கம், பவளம்
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீசிவன், ஸ்ரீசூரியன்