செவ்வாய், 2 ஜூலை 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 18 டிசம்பர் 2021 (16:39 IST)

தில்லை நடராஜ பெருமானுக்கு களி படைத்து வழிபடுவது ஏன் தெரியுமா...?

தில்லையில் சேந்தனார் என்னும் சிவபக்தர் வாழ்ந்து வந்தார். அவர் விறகு வெட்டி, விற்று தன் குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்ய தவறமாட்டார். அதுமட்டுமல்லாமல் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார். 

சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து மகிழ்வார். ஒருநாள் திருவாதிரை திருநாளுக்கு முதல் நாள் இரவிலிருந்து கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது. தொடர் மழையால் எங்கும் வெளியில் விறகு வெட்டச் செல்ல முடியாமல் சேந்தனார் தவித்தார். அதனால் வீட்டில் சமைப்பதற்கு எந்த பொருளும் இல்லை. காட்டிற்கு சென்று விறகு வெட்டிக் கொண்டு அதை விற்று வந்தால்தான் அன்றைக்கு உணவு. அதனால் சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது? என்று சேந்தனாரும், அவரது மனைவியும் கவலைப்பட்டு கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது, அவர்கள் வீட்டின் வாசல் முன், திருச்சிற்றம்பலம்! சம்போ மகாதேவா... என்ற குரல் கேட்டது. வெளியில் சிவனடியாரை பார்த்ததும் அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்து, அவருக்கு ஆசனம் அளித்து பணிவிடை செய்தார்கள்.
 
சிவனடியாரின் பசியை போக்க வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால், சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த சிறிதளவு அரிசிமாவில் வெல்லப்பாகு தயாரித்து கலந்து களி கிளறினாள். சிவனடியாரும் அவர்கள் கொடுத்த களியை உண்டு, மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தி, விடைபெற்று சென்றார்.
 
மறுநாள் காலை சேந்தனாரும், அவரது மனைவியும் ஸ்ரீநடராஜ பெருமானை தரிசிக்க சிவாலயம் சென்றார்கள். அங்கு கோவிலை திறந்த தில்லை வாழ் அந்தணர்கள், இறைவன் சன்னதியில் களி சிதறி கிடப்பதை கண்டு வியந்தார்கள். சேந்தனாரும், அவரது மனைவியும் இறைவன் முன் களி சிதறி கிடப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர். 
 
சேந்தனாரும், தமது வீட்டிற்கு சிவனடியார் வந்ததையும், அவருக்கு களி கொடுத்து உபசரித்ததையும் அந்தணர்களிடம் கூற, இது நடராஜ பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து, சேந்தனாரையும் அவரது மனைவியையும் போற்றி மகிழ்ந்தார்கள். அன்றிலிருந்து மார்கழி திருவாதிரை திருநாளில் களி செய்து ஸ்ரீநடராஜ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது என்று புராணம் கூறுகிறது.