வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

திருக்கார்த்திகை நன்னாளில் வீட்டில் தீபமேற்றி வழிபடுவது ஏன் தெரியுமா...?

அனைத்து சிவன் கோயில்களிலும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணு கோயில்களிலும் கூட பரணி தீபம் என்று  கொண்டாடப்படும்.

திருக்கார்த்திகை தீப விழா என்பது முருகப்பெருமானின் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. கார்த்திகேயப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களில்  திருக்கார்த்திகை விழா, தீபங்களேற்றி கொண்டாடுவார்கள்.
 
சூரபத்மனை அழிப்பதற்காக, சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து உருவாக்கியவர்தான் முருகக் கடவுள். அப்படியொரு அவதாரம் நிகழ்ந்த போது, முருகக்  குழந்தையை கார்த்திகைப் பெண்கள்தான் வளர்த்தார்கள். அதனால்தான் கந்தக் கடவுளுக்கு கார்த்திகேயன் எனும் திருநாமம் அமைந்தது என்கிறது புராணம்.
 
திருக்கார்த்திகை நன்னாளில், வீட்டில் தீபமேற்றி வரிசையாக வைத்து வழிபடுவதை, கார்த்திகைப் பெண்கள் வந்து பார்ப்பார்கள், பார்த்து அருளுவார்கள் என்பது ஐதீகம். முத்துக்குமரன் கார்த்திகேயனும் நம் வீட்டுக்கு வந்து அருளுவான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதனால், திருக்கார்த்திகை தீப நாளில் விளக்கேற்றி சிவபெருமானையும் சிவமைந்தன் கந்தக் கடவுளையும் வழிபடுவோம். 
 
சுவாமிமலை, திருப்பரங்குன்றம், வயலூர் முதலான முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக  நடைபெறும்.
 
துர்காதேவிக்கும் கார்த்திகா என்றொரு திருநாமம் உண்டு. துர்காதேவியானவள், அக்னி மண்டலத்தில் வீற்றிருப்பவள். அக்னிமயமாகத் திகழ்பவள். அதனால் அவள்  கார்த்திகைப் பெண்களுக்கு நடுவே அக்னி துர்கையாக இருக்கின்றாள் என்கின்றன ஞானநூல்கள். இதனால் வாழ்வில் சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம். சிக்கல்களையும் கஷ்டங்களையும் தீர்த்துவைப்பான் ஞானக்குமரன். செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும்.