திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிறப்புக்கள் மிகுந்த வைகாசி விசாகத்தில் நடைபெறும் விஷேசங்கள் என்ன தெரியுமா...?

ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் மறைந்திருக்கும் அகோபிலம் நரசிங்கமூர்த்தி, வைகாசி விசாகத்தில்தான் சந்தனக் காப்பைக் களைந்து விக்கிரக உருவத்தில் காட்சி தருவார். 

அதன்பின் அடுத்த வைகாசி விசாகத்தில்தான் நரசிங் மூர்த்தியை முழுமையாக மீண்டும் தரிசிக்க முடியும். இந்த மாதத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்து திருமணம், வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட பல நல்ல காரியங்களைச் செய்யலாம். 
 
திருமணம் செய்ய, சீமந்தம் செய்ய, காது குத்த நல்ல நாட்கள் உள்ளன. வருடத்தை ஆறு காலங்களாக வகுத்த நம் முன்னோர்கள் சித்திரை, வைகாசி இரண்டு மாதங்களையும் இளவேனில் காலமாகப் பிரித்தனர். வைகாசி என்பதை விகாஸம் என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள். வைகாசியே  வடமொழியில் வைஸாகம். வைணவர்கள் இம்மாதத்தை மாதவ மாதம் என்றழைப்பார்கள்.
 
முருகனது தனிப்பட்ட விழாக்களில் விசாகமும் ஐப்பசி சஷ்டியுமே மிக முக்கியமானவை. சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர்களை காத்தருள சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். 
 
இந்தத் தீப்பொறிகள் வாயு, அக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையோ அவற்றை சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு வந்து சேர்ந்ததும் அவை வைகாசி விசாகத்தன்று ஆறு குழந்தைகளாக மாறின. கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தைகளை வளர்த்தனர். ஆறுமுகம் கொண்ட முருகன் தோன்றி தேவர்களைக் காத்தருளினார்.
 
வைகாசி தேய்பிறை அஷ்டமி சதாசிவாஷ்டமி - கடன் தொல்லை தீர காலபைரவரை வணங்கலாம். வைகாசி விசாகம் நாளில் முருகனை வழிபடுவதால் நம்  பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும் மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும் கோலாகலமான விழாவும் நடைபெறுகின்றன. இந்நாளில் தானமும், தர்மமும் செய்தால் நல்லது.