நாக பஞ்சமி அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்....!!
ஆடி மாதம் வளர் பிறைச் சதுர்த்தியில் மகளிர் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபடுவது நாக சதுர்த்தி விரதமாகும். ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது.
சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது.
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.
இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.
நாக பஞ்சமி அன்று சிறிய வெள்ளி அல்லது செம்பில் செய்த நாகருக்கு வீட்டிலேயே பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பூக்களால் அர்ச்சித்து, பால் பாயசம் நிவேதனம் செய்வது வழக்கம். இப்பூஜையினால் தங்கள் குழந்தைகளுக்கும், கணவருக்கும், சகோதரர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.