குரு பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

Mahalakshmi| Last Updated: வெள்ளி, 3 ஜூலை 2015 (12:53 IST)
உழைப்பால் சாதிப்பவர்களே! இதுவரை உங்களின் முயற்சி வீடான மூன்றாம் வீட்டில் அமர்ந்து கொண்டு, எந்த ஒரு வேலையையும் முழுமையாக முடிக்கவிடாமல் முடக்கி வைத்த குரு பகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் 4-வது வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார். இதுவரை இருந்து வந்த காரியத் தடைகள் நீங்கும். தோல்வி என்றால் துவண்டீர்களே! இனி மாற்று வழி யோசிப்பீர்கள். நட்பு வட்டம் மாறும். வி.ஐ.பிகளுடனான பகைமை விலகும். அவர்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறத் தொடங்குவீர்கள்.

என்றாலும் நீங்கள் கொஞ்சம் முன்எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவதுடன், கொஞ்சம் கடினமாகத் தான் உழைக்க வேண்டி வரும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் அஷ்டமாதிபதியும், லாபாதிபதியுமான குருபகவான் 4-ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால் உங்களின் நடத்தை கோலங்கள் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். இடப்பெயர்ச்சி உண்டு. திருமணம், கிரகப் பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும்.

மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். அதேப் போல முறையான அரசாங்க அனுமதியின்றி கூடுதல் தளமோ, அரசாங்க இடத்தை ஆக்கிரமித்து இடத்தை விரிவுப்படுத்தி வீடு கட்டுவதோ அல்லது கடையை விரிவுப்படுத்துவதோ வேண்டாம். உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தாரைப் பற்றியோ உறவினர்கள், நண்பர்கள் விமர்சித்துப் பேசுவதைக் கேட்டு மனைவி மக்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தின் பொருட்டு அல்லது கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகளால் பிரிவுகள் ஏற்படக்கூடும். உங்களின் கோபதாபங்களையும், கூடாப்பழக்க வழக்கங்களையும் உங்கள் மனைவி சில சமயங்களில் சுட்டிக் காட்டுவார்.

அதற்காக அவரிடம் ஏட்டிக்குப் போட்டியாக நடந்துக் கொள்ளாமல் திருத்திக் கொள்வது நல்லது. உங்களின் தாயார் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். அவரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். அயல்நாட்டில் சிலருக்கு வேலைக் கிடைக்கும். சிலர் பூர்வீகத்தை விட்டு, இருக்கும் ஊரை விட்டு அல்லது நாட்டை விட்டு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு குறையும். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.


குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளிடம் அதிகம் கெடுபிடி காட்டாமல் அன்பாக நடத்துங்கள். அவர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உயர் கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிய நேரிடும். உணவு விஷயங்களில் நாக்கை கட்டுபடுத்துங்கள். எந்த வேலையை செய்தாலும் நேரத்திற்கு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சொத்து வாங்குவதாக இருந்தாலும் தாய்பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. சிலர் நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியூரில் அல்லது எல்லைப் பகுதியில் இடம் வாங்கி வைத்திருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.


உங்களின் உத்யோகஸ்தமான 10-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் உத்யோகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் வெகுவாக குறையும். மகிழ்ச்சி உண்டாகும். புது வேலை அமையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவர்கள். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் நீதிமன்றம் போகாமல் லாபமோ நஷ்டமோ பேசித் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். பகட்டிற்காகவும், கௌரவத்திற்காகவும் வீண் செலவுகள் செய்துக் கொண்டிருக்காதீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம்.


குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். கோவில் கும்பாபிஷேகம் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அண்டை அயலாரை அரவணைத்துப் போங்கள். அவ்வப்போது தூக்கம் குறையும்.


இதில் மேலும் படிக்கவும் :