வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. சிவராத்திரி ஸ்பெஷல்
Written By Sasikala

சிவனுக்கு உகந்த எட்டு விரதங்களில் உயர்ந்தது மகா சிவராத்திரி விரதம்!

மகா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும்  குறிப்பிடுகின்றன.  மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி  திதியன்று வருவது மஹா சிவராத்திரி.

 
வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி  உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
 
எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா  மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம், ரிசப விரதம் என்பன அவையாகும். இத்திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என ‘வள்ளல்  பெருமான்’ இராமலிங்க அடிகள் கூறுகின்றார்.
 
தனித்திரு 
 
ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல், எவ்வித கூட்டுறவுகளில்  கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் - மனம் தனித்து அமைதி நிலையில்  இறையுணர்வோடு இருத்தல் ஆகும்.
 
விழித்திரு
 
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய், பொறாமை, காமம்,  குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் -  விழித்திருத்தல் எனப்பெறும். விழிப்புடன் இருத்தல் ஆகும். 
 
பசித்திரு
 
பசியோடு இதிருந்தால்தான் புசிக்கலாம். ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே  பசித்திருத்தல்,  முழுமை சித்தி அடையும்வரையில் ஞானப் பசியுடன் இருத்தல் ஆகும்.