சிவனின் வடிவமான சனீஸ்வர பகவான் உள்ள திருநள்ளாறு திருத்தலம்!

Sasikala|
திருநள்ளாறு காரைக்கால் அருகில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். சிவனின் வடிவமான சனீசுவர பகவானுக்கு என்று திருநள்ளாறில் உள்ள கோவில். சனி பெயர்ச்சி அன்று தர்ப்பாரண்யேசுவரர் கோயிலுக்கு லட்ச கணக்கான பக்தர்கள் இங்கு வருவர். தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற, சக்தி வாய்ந்த கோவிலான திருநள்ளாறு வந்து வழிபட்டால் அனைத்து  துன்பங்களும் தீரும் என்பது நம்பிக்கை.
 
 
திருநள்ளாறு கோயிலுக்கு ஒரு காலத்தில் ஆதிபுரி என்றும், சிவனை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதாக ஸ்தலபுராண  வரலாறு சொல்கிறது. பிரம்மதேவர் பூஜித்த சிவனுக்கு 'தர்ப்பாரண்யேஸ்வரர்' என்பது பெயராகும். இங்குள்ள ஸ்தல விருட்சம்  தர்ப்பை ஆகும்.
 
இங்குள்ள லிங்கம் சுயம்புவாக தோன்றியதாகும். நள மகாராஜா கலிபுருடனின் அம்சமான சனி பகவானால் பல்வேறு  இடையூறுகளுக்கு ஆளாகி, இறுதியில் இக்கோயிலுக்கு வந்து நளதீர்த்தத்தில் நீராடியபின் கலி நீங்கி சகல சம்பத்துகளையும்  பெற்றான்.
 
கலிபுருடனாகிய சனிபகவான் நளமன்னன் முன் தோன்றி, நீ என்னிடம் விரும்பும் வரத்தை கேட்டு பெற்றுக்கொள்வாயாக என்று  கேட்க, நளன் உனது ஆட்சி நடக்கும் காலத்தில் என் வரலாற்றைக் கேட்டாரை நீ அடையாமல் இருப்பாயாக என்று  வேண்டினான். இதனை நளவெண்பா, கலி நீங்கு காண்டத்தில்,
 
உன் சரிதம் சொல்ல உலகாளும் காலத்தும்
மின் சொரியும் வேலாய்!மிக விரும்பி-என் சரிதம்
கேட்டாரைநீயடையேல் என்றாந்கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து
 
என்று கூறுகிறது. எனவே சனிபகவானின் பிடியில் சிக்கியோர் அக்காலத்தில் நளமன்னனின் சரித்திரத்தை வாசிப்பது சிறந்த  பரிகாரமாகும். என அக்க்காலம் முதல் நம் பெரியோர் சொல்லி வந்திருக்கின்றனர். இதில் உள்ள சூட்சுமம் என்னவெனில்,  இவனை விட நாம் கஷ்டப்படவில்லை என தைரியம் வரும் அளவுக்கு கஷ்டத்தை நளன் பட்டதுதான்.
 
சனீஸ்வர பகவான், இன்பம் துன்பம் என கலந்து கொடுத்து நம் வாழ்க்கை நெறிகளைப் புரிய வைப்பவர். ஆதலால், சனி  பகவானின் கருணைப் பார்வை நம் மீது விழ வேண்டும், நம் வாழ்க்கை சுபிக்ஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணி  இக்கோவிலுக்கு வந்து பலரும் வழிபடுகின்றனர்.
 
கோவிலில் உள்ள சனீஸ்வர பகவானை வழிபடுவதற்கு முன்னர் அங்கு உள்ள நள தீர்த்தத்தில் நீராடுவர். இது காலா காலமாக  வழக்கில் இருந்து வருகிறது. தாமதமாக தந்தாலும், சனி பகவான், நிச்சயமாக நல்ல பலன்களை நம் வாழ்வில் தருவார் என்பது  பக்தர்களின் நம்பிக்கை.
 
திருநள்ளாறு சென்று அங்குள்ள தீர்த்தகட்டங்களில் முதலில் நீராட வேண்டும்.
 
1. பிரம்ம தீர்த்தம்
2. வாணிதீர்த்தம்
3. அன்ன தீர்த்தம்
4. அகத்திய தீர்த்தம்
5. நளதீர்த்தம்
6. நளகூப தீர்த்தம்
 
இதில் நீராட முடியாதவர் நள தீர்த்தத்தில் மட்டுமாவது நீராடலாம். முதலில் குளக்கரையில் உள்ள வினாயகரை மூன்று முறை  வலம் வந்து வழிபட்டு, குளத்தை உருவாக்கியோருக்கு நன்றி சொல்லிவிட்டு, தீர்த்தத்தை மூன்று முறை தலையில்  தெளித்துவிட்டு, அதன்பின் கறுப்பு நிற வஸ்திரம் கட்டிக்கொண்டு, உடலில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு, மேற்கு பார்த்து  நின்று குளிக்கலாம். தலையில் நீலோத்பவ மலரை வைத்து மூழ்குவது இன்னும் சிறப்பு. அதன்பின் புத்தாடை அணிந்து, கறுப்பு  நிற வஸ்திரங்களையும், எள், எள்சாதம், முதலியவற்றை தானம் செய்வது விசேஷமாகும்.


இதில் மேலும் படிக்கவும் :