வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

திருநீறும் மூன்று கோடுகள் அணிவதின் தத்துவம்!

சிவபெருமானை தியானித்து தண்ணீருடன் சேர்த்துக் குழைத்து மூன்று கோடுகளாக விபூதியை இட்டுக் கொள்ளல் வேண்டும். இதற்கு திரிபுண்டரம் என்று பெயர். மூன்று வகைப்பாவங்களைப் போக்கும் விபூதியின் மூன்று கோடுகள் மகத்தானவை.

 
சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும்  சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.
 
முதல் கோடு: அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை  மஹாதேவன் ஆகியவை அடங்கியது.
 
இரண்டாவது கோடு: உகாரம், தட்சிணஅக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி,  அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.
 
மூன்றாவது கோடு: மகாரம், ஆலஹனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர  தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.
 
சிவபெருமானை எண்ணி விபூதியை அணிவதே மாஹேஸ்வர விரதம் எனப்படும். இந்த விரதம் எல்லா பாபங்களையும்  நீராக்கும்; மோட்சம் தரும்; பயம் போக்கும்.
 
எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும்  தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு  வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
 
விபூதி அணியும் முறை:
 
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு  விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும்.