வார்த்தைகள் இட்டு விளக்க முடியாத சும்மா வெறுமனே இருத்தல் - சாதுவின் ஆன்மாவை தேடி


Sasikala|
ஒருசாது, ஆன்மாவை தேடிக்கொண்டிருப்பவர். ஒரு முறை அவர் குன்று ஒன்றின் மீது நின்று கொண்டிருந்தார். அது விடியற்காலைப் பொழுது சூரியன் பிரகாசிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தான்.

 
 
சில நண்பர்கள் நடைப்பயில வெளியே வந்திருந்தார்கள். சாது தன்னந்தனியாக நின்று கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தார்கள். ஒருவருக்கொருவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்: `இந்த சாது என்னதான் செஞ்சிக்கிட்டிருக்கார்?”
 
அவர்களில் ஒருத்தன் சொன்னான்: “அவரோட பசுமாடு சில சமயங்களில் காட்டுக்குள்ளே வழிதவறிப் போய்விடுவதுண்டு. அது வருமானு பார்த்துக்கிட்டு நிக்கறாரோ, என்னவோ?”
 
மற்ற நண்பர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
இன்னொருத்தன் சொன்னான், “அவர் நின்னுக்கிட்டுருக்கிற கோணத்தப் பார்த்தால், எதுவோ வருமான்னு பார்த்துக்கிட்டிருப்பதைப் போல தோணல, யாருக்காகவோ அவர் காத்திருப்பதை போலத்தான் தெரியுது. அவர் கூட வந்த நண்பர் தவறிப் போயிருக்கலாம்” இக்கருத்தையும் ஏனையவர்கள் ஏற்றுக் கொள்வதாய் இலலை. மூன்றாவதாக ஒருத்தன் சொன்னான் “யாரையும் அவர் தேடவுமில்லை, யாருக்காகவும் அவர் காத்திருக்கவுமில்லை. கடவுளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில அவர் தன்னை இழந்த நின்று கொண்டிருக்கிறார்.”இப்பதிலும் அவர்களால் ஒப்புக் கொள்ல முடியாமல் போனதால், காரணத்தைத் தெரிந்து கொள்ள சாதுவையே நாடுவிடுவது என முடிவெடுத்தார்கள்.
 
முதலாமவன் கேட்டாம்: “தொலைஞ்சுட்ட பசு வருமான்னு நீங்க எதிபார்த்துகிட்டிருக்கீகளா?” இதற்கு சாது ”இல்லை” என்று பதிலளித்தார். இன்னொருவன் கேட்டான்: “அப்ப, நீங்க யாருக்காகவாவது காத்துருக்கிறீர்களா?” இதற்கும் சாது ”இல்லை” என்று பதிலளித்தார். மூன்றமவன் கேட்டான்: “கடவுளைப் பற்றிய சிந்தனையில சுயநினைவு மறந்து நின்னுக்கிட்டிருக்கீங்களா?” மறுபடியும் சாது சாதகமான பதிலைத் தரவில்லை. மூன்று பேர்களும் அதிசயித்துப் போனார்கள்.
 
மூவரும் ஒன்றாய் கேட்டார்கள்: “அப்ப நீங்க இங்க என்னதான் பண்ணிக்கிட்டிருக்கீங்க?” சாது சொன்னார்: “நான் ஒண்ணும் பண்ணல. நான் `சும்மா’ வெறுமனே நின்னுக்கிட்டிருக்கேன். நான் இங்கே சும்மா இருக்கேன்”.
 
இப்படி நாம் சும்மா வெறுமனே இருத்தல் வேண்டும். நாம் ஒன்றும் பண்ணக்கூடாது. அனைத்தையும் நாம் கடந்து போய் விட்டு அப்படியே இருக்க வேண்டும். 
 
அப்போது வார்த்தைகள் இட்டு விளக்க முடியாத ஒன்று இடம் பெறும். அப்படி வார்த்தகளால் விவரிக்கவே முடியாத அளவுக்கு இடம் பெறும் அந்த அனுபவம் மட்டுந்தான் - சத்தியம், சுயம்பு, ஆன்மா, இறைமை என்பதன் அனுபவம்!
 
நன்றி தினகரன் - ஆன்மிகம்.


இதில் மேலும் படிக்கவும் :