வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

முற்பிறப்பில் ஆனந்த குரு என்பவருக்கு மகளாக பிறந்த சூர்ப்பனகை!

ராமாயணக் கதைக்கு முக்கிய காரணமானவளே சூர்ப்பனகை. அவள் தான், சீதையின் அழகு பற்றி தன் அண்ணன் ராவணனிடம்  கூறி உசுப்பேற்றியவள்.

 
சூர்ப்பனகை என்பவள் முற்பிறப்பில் ஆனந்த குரு என்பவருக்கு மகளாகப் பிறந்தாள். அப்போது அவளது பெயர் சுமுகி. ஆனந்த  குருவிடம், சத்தியவிரதன் என்ற மன்னனின் மகனான சங்கசூடணன் என்பவன் பாடம் படித்தான். சங்கசூடணனை சுமுகி ஒருதலைப்பட்சமாகக் காதலித்தாள். ஒருநாள் பாடத்தில் சந்தேகம் கேட்க குருவின் வீட்டுக்கு சங்கசூடணன் சென்றான். குரு  வீட்டில் இல்லை. சுமுகி தனித்திருந்தாள். தன் காதலை சங்கசூடணனிடம் வெளிப்படுத்தினாள்.
 
அதற்கு, பெண்ணே! குரு துரோகம் பொல்லாதது. குருவின் மகளான உன்னை என் தங்கையாகவே நினைக்கிறேன்,'' என சொல்லிவிட்டு போய்விட்டான் சங்கசூடணன். ஏமாற்றமடைந்த சுமுகி, தந்தை வீட்டுக்கு வந்ததும் தன்னை சங்கசூடணன்  கெடுத்து விட்டதாக பழி போட்டு விட்டாள். இதை நம்பிய குரு, மன்னனிடம் இதுபற்றி புகார் தெரிவித்தார். மன்னனும் அதை  நம்பி, தன் மகனின் கை, கால்களை வெட்டிவிட்டான். சங்கசூடணன் பூமியில் விழுந்து, தர்மம் அழிந்து விட்டதா? எனக்  கதறினான்.
 
உடனே பூமி பிளந்தது. உள்ளிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டான். "சங்கசூடா! இப்பிறப்பில் உன்னை இந்த நிலைமைக்கு  ஆளாக்கிய சுமுகியை மறுபிறப்பில் நானே பழிவாங்குவேன்,'' என்றான்.
 
சங்கசூடணன் மறுபிறப்பில் ராவணனின் தம்பியாக (விபீஷணன்) பிறந்தான். அவனது தங்கையாக சுமுகி பிறந்தாள். அவளே  சூர்ப்பனகை எனப் பெயர்பெற்றாள். ஆதிசேஷன் லட்சுமணனாகப் பிறந்து சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தான்.