1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

மஹாளய பட்ச காலத்தில் இல்லங்கள் தேடிவரும் முன்னோர்கள்

'மகாளயம்' என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.

 
 
பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு  தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.
 
பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை  அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள்  விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே,  எனவே அவர்கள் மஹாள்ய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த  பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.
 
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது. வருடத்தில் மற்ற மாதங்களில்  வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில்,  சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம்  செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூர வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு (கடலுக்கு) சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும்.