மஹாபெரியவரின் அற்புத ஆன்மீக அருளுரைகள் !!
தான தருமம் செய்து, சந்தியாவந்தனம், யாகம், பூஜை பரோபகாரம் எல்லாம் நல்லதில் மனசைச் செலுத்தும் பகிரங்க சாதனங்கள். தியானம் என்பதே மிகச் சிறந்த அந்தரங்க நிலை.
அதற்கு அநுகூலமாக இருக்கிற மற்ற அந்தரங்க சாதனங்கள் ஐந்து. அவை. அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் என்பவை. எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனசை அன்புமயமாகச் செய்து கொள்வது அஹிம்சை. மனம், வாக்கு, காயம் மூன்றையும் உண்மையிலே ஈடுபடுத்துவது
அஸ்தேயம் என்றால் திருடாமல் இருப்பது என்று அர்த்தம். அதாவது, பிறர் பொருட்களில் ஆசையே எழாதபடி வைராக்கியமாக இருப்பது. சௌசம் என்றால், தூய்மைப்படுத்திக் கொள்வது. ஸ்நானம், மடி, ஆசாரம், ஆகாராதிகளின் சுத்தி எல்லாம் சௌசத்தில் அடங்கும்.
இந்திரிய நிக்ரஹம் என்பது புலன்களை அவற்றின் போக்கில் விடாமல் ஒவ்வோர் இந்திரியத்துக்கும் இவ்வளவுதான் ஆகாரம் கொடுப்பது என்று நிர்ணயமாக வைத்துக் கொள்வது.
கண் இதைப் பார்க்கக்கூடாது. காது இதைக் கேட்கக்கூடாது. வாய் இதைத் தின்னக்கூடாது. இதைப் பேசக்கூடாது. உடம்பு இந்தப் பாவத்தை செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்துவதே இந்திரிய நிக்ரஹம்.
சாதனை செய்வதற்காக மட்டுமே சரீரம் வேண்டும். சரீரம் உயிர் வாழ்வதற்காக இந்திரியங்களுக்கு எவ்வளவு அதம பட்சம் தீனி கொடுக்க வேண்டுமோ அவ்வளவே கொடுக்க வேண்டும்.
அந்த ஐந்தும் சாமானிய தர்மங்கள் எனப்படும். அதாவது நமது மதத்தைச் சேர்ந்த சகல பிரிவினரும் இவற்றை அநுஷ்டிக்க வேண்டும் என்பது மநுதர்மம்.
எல்லா மக்களுக்கும் பொதுவான சாமானிய தர்மங்களில் அஹிம்சையே முதலானது என மனு தர்ம சாஸ்திரம் விதிக்கிறது. மனஸை ஸ்வாதீனப்படுத்திக் கொள்ளும் யோகத்துக்கு ஓர் அங்கமாக அஹிம்சை கருதப்படுகிறது.