திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: முழு விவரம்

Webdunia|
மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால் பல அரசுத் துறைகளும் - பொது நிறுவனங்களும் இந்த இட ஒதுக்கீட்டினை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. மாற்றுத் திறாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக மத்திய அரசு பின்பற்ற வேண்டும்.

அரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையில், அவர்களுக்கு ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் வழங்க வேண்டும்.

மண்டல் கமிஷன் அறிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்ற பரிந்துரையை செயல்படுத்திட வேண்டுமென இந்திரா சவ்கானி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டதைப் போல, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும்.
மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைளை மேற்கொள்ள மத்திய அரசை விலயுறுத்தும்.

தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்புகளை எவ்விதத் தடைகளுமின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக, கல்லூரிக் கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம் உள்பட அனைத்தையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் உதவி தொகையளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு வழங்கிய தனி இட ஒதுக்கீடு போன்று வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு வேலைகளுக்கான நேர்காணலுக்குச் செல்லும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பு மாணவர்களுக்கு அவர்களுடைய பயணச் செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும்.
குடிசைகளிலே வாழ்ந்து வருகின்ற தாழ்த்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் அனைவருக்கும் அடுத்த 5 ஆண்டு காலத்திற்குள் தரமான வீடுகள் கட்டித் தருவதற்கு மத்திய அரசு, மாநில அரசின் நிதிப் பங்கேற்புடன் செயல் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும். இந்த வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு தற்போது ரூ.1 லட்சம் என்று உள்ளதை ரூ.3 லட்சம் வரை உயர்த்தி தந்திடுவதற்கான முயற்சி மேற்கொள்ளும்.
சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில், சமத்துவ புரங்களை நாடெங்கிலும் ஏற்படுத்த வலியுறுத்துவோம்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்கள் போதுமான அளவில் இடம் பெறவில்லையெனில் அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் விதத்தில் தர வரிசையினை தவிர்த்து அவர்களுக்கு முன்னுரிமை அளித்து சமூக நீதி காத்திட வலியுறுத்தும்.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலம் தென் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பயண நேரம் குறையும். எரிபொருள் மீதமாகும். ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே பெரிய அளவில் வளமும் நன்மையும் கிடைக்கும்.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேது சமுத்திரத் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றிட இணைக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும்.

ஏவப்படும் செயற்கைக்கோளின் எடையின் அடிப்படையிலும், ஏவுதளத்திற்கு எடுத்துச் செல்லும் தூரம் மற்றும் செலவினங்கள் அடிப்படையிலும், குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைவது விண்கலன்களை ஏவும் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் என்பதாலும், தென் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், குலசேகரப்பட்டினத்தில் "இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்" அமைத்திட வற்புறுத்தும்.
திருநெல்வேலி மாவட்டம் கேந்திரகிரியில் "திரவ உந்துவிசை தொழில்நுட்ப மையம்" அமைத்திட பாடுபடும்.

கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைக் தடை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்திருப்பதை திரும்பப் பெறச் செய்து கச்சத்தீவினை மீட்கும் முயற்சியில் தீவிரமாக பாடுபடும்.


இதில் மேலும் படிக்கவும் :