புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. அரசு திட்டங்கள்
  3. மத்திய அரசு திட்டங்கள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (14:57 IST)

மாதம் ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியம் வேண்டுமா? – அடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)

Atal Pension Yojana
அமைப்புசாரா பணிகளில் ஈடுபடும் மக்கள் தங்கள் ஓய்வு காலங்களில் ஓய்வூதியம் பெறும் வகையில் அடல் பென்ஷன் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana) வருங்கால வைப்பு நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்ற அரசு அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து மாதம்தோறும் குறிப்பிட்ட அளவு தொகை செலுத்துவதன் மூலம் ஓய்வு காலத்தில் மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியமாக பெற முடியும். இந்த திட்டத்தின் பயன்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து பார்க்கலாம்.

அமைப்பு சாராத துறைகளில் பணியாற்றுவோர் தங்களது ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் பெறும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மாதம்தோறும் பயனாளர் குறிப்பிட்ட தொகையை இந்த திட்டத்தின் கீழ் கட்ட வேண்டும். அரசும் குறிப்பிட்ட அளவு தொகையை அவர்களுக்கு வழங்கும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் இதில் இணையலாம். ஆனால் அவர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகை மட்டுமே கிடைக்கும். அரசு அவர்களுக்கு தொகை செலுத்தாது.

இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் இணையலாம். இந்த திட்டத்தில் ரூ.1000 முதல் ரூ.5000 வரை மாத ஓய்வூதியம் 5 வகைகளில் ஏதாவது ஒன்றில் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்போதே மாதம்தோறும் எவ்வளவு பெற விரும்புகிறோம் என்பதை குறிப்பிட வேண்டும். அந்த தொகைக்கு ஏற்ப மற்றும் வயதிற்கு ஏற்ப மாதம்தோறும் கட்ட வேண்டிய தொகை நிர்ணயிக்கப்படும். அதன் விவரங்கள் கீழே..
Atal Pension Yojana

விண்ணப்பிக்கும் முறை

18 முதல் 40 வயதிற்குட்பட்டோர் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கியில் இந்த பென்சன் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான புகைப்படம், முகவரி சான்று, ஆதார் அட்டை நகல் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பத்தை வங்கி பதிவு செய்து உங்களுக்கு ப்ரான் எண் (PRAN Number) ஒன்றை தருவார்கள். அதுதான் நீங்கள் அடல் பென்சன் திட்டத்தில் இணைந்ததற்கான கணக்கு எண்.

பணம் செலுத்தும் முறை மற்றும் அபராதம்

நீங்கள் ப்ரான் எண் பெற்ற பிறகு உங்கள் முதல் மாத ப்ரீமியத்தை வங்கியில் கட்ட வேண்டும். வங்கி கணக்கையும் இணைத்திருப்பதால் மாதம்தோறும் தானியங்கி முறையில் (Auto debit) முறையிலும் பணத்தை செலுத்தலாம். முதல் தவணை எந்த தேதியில் செலுத்துகிறீர்களோ அதே தேதியில் ஒவ்வொரு மாதமும் ப்ரீமியம் பணத்தை செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்.

இந்த திட்டத்தில் இணைந்த பின் பணம் கட்ட தவறும் பட்சத்தில் மாதம்தோறும் ரூ.100 ரூபாய்க்குள் கட்டுபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.1 அபராதமாகவும், ரூ.101லிருந்து ரூ.500 வரை கட்டுபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.2 அபராதமாகவும், ரூ.501லிருந்து ரூ.1000 வரை கட்டுபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.5 அபராதமாகவும், ரூ.1000த்திற்கு மேல் கட்டுபவர்களுக்கு ரூ.10 அபராதமாகவும் வசூலிக்கப்படும்.

தொடர்ந்து 6 மாதங்கள் பணம் செலுத்தாமல் இருந்தால் சேமிப்பு கணக்கு முடக்கப்படும், 24 மாதங்களுக்கும் மேல் செலுத்தப்படாமல் இருந்தால் நீங்கள் திட்டத்திலிருந்து நீக்கப்படுவீர்கள்.

பென்சன் எப்போது கிடைக்கும்?

மேற்கூரிய விதிமுறைகளின்படி பென்சனுக்காக மாதம்தோறும் ப்ரீமியம் செலுத்தும் ஒருவர் அவரது 60 வயதிற்கு பிறகு உள்ள காலம் முழுவதும் மாதம்தோறும் எந்த அளவு தொகைக்காக ப்ரீமியம் செலுத்தினாரோ அந்த தொகையை மாதம்தோறும் தொடர்ந்து பெறுவார்.

அவருக்கு பின் அவர் யாரை நாமினியாக விண்ணப்பத்தில் சேர்த்திருந்தாரோ அவர்களுக்கு அவர்கள் உயிருடன் உள்ளவரை அந்த தொகை சென்றடையும். முதல் நாமினியும் இறந்துவிடும் பட்சத்தில் இரண்டாவது நாமினிக்கு பென்சனுக்கு பதிலாக உறுதி செய்த மொத்தத்தொகை வழங்கப்பட்டு விடும்.

ஒருவேளை விண்ணப்பத்தவர் 60 வயதை எட்டும் முன்னே உயிரிழந்தால் அல்லது அவரது அவசர மருத்துவ சிகிச்சைக்காக பணத்தேவை ஏற்பட்டால் அதுவரை அவர் செலுத்திய தொகை மற்றும் அரசு வழங்கிய தொகை சேர்த்து மொத்தமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் சேருபவர்கள் தேவைபட்டால் தனது திட்டத்தை தன்னுடைய வேறு வங்கி கணக்கிற்கோ, கிளைக்கோ மாற்றிக் கொள்ளலாம்.

அடல் பென்சன் திட்டத்திற்கான விண்ணப்பம் பெற இங்கே சொடுக்கவும்