1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala

உகாதி பண்டிகை - தெலுங்கு வருடப் பிறப்பு

உகாதி பண்டிகை - தெலுங்கு வருடப் பிறப்பு

சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 


 
 
எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
 
இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து , வீடுகளை அலங்கரித்தும், உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.
 
உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லாஎன அழைப்பர்.
 
உகாதி பச்சடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இது அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும். இப்படி அறுசுவைகள் சேர்த்து செய்வதற்கு காரணம், சந்தோஷமாக வாழ்ந்திட, வாழ்க்கையின் அறுசுவையான இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே ஆகும்.
 
உகாதி பச்சடி:
 
தேவையான பொருட்கள்: 
 
மாங்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது) 
வேப்பம்பூ - 1 டேபிள் ஸ்பூன் 
வெல்லம் - 1 கப் (தட்டியது) 
தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன் 
புளி சாறு - 4 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - 3 கப் 


 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, புளி சாறு ஊற்றி, அத்துடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் வெல்லம், மிளகாய் தூள், உப்பு, வேப்பம்பூ, தேங்காய் துண்டுகள் சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், உகாதி பச்சடி ரெடி.
 
தமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்யாது போயினும், இனிப்பு வகைகள் முதலியவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.