சிவனிடம் சாப விமோசனம் பெற்ற நாகங்கள்

சிவனிடம் சாப விமோசனம் பெற்ற நாகங்கள்


Sasikala|
இறைவன் சிவபெருமான் கழுத்திலும், கைகளிலும் சில நாகங்களை அணிகலன்களாக அணிந்திருப்பார். தாங்கள் சிவபெருமானுக்கு அணிகலன்களாக இருப்பதால்தான், அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் என்று அந்த நாகங்கள் நினைத்துக் கொண்டன.

 


மேலும் இறைவனை யார் வணங்கினாலும், அவர்கள் தங்களையும் சேர்த்துத்தான் வணங்குகின்றனர் என்றும் தாங்களாகவே பெருமைபட்டுக் கொண்டன. நாகங்களின் இந்த எண்ணம் சிவபெருமானுக்குத் தெரிந்த போதும், அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்.
 
இந்த நிலையில் ஒரு முறை விநாயகப்பெருமான், கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமானை வழிபாடு செய்தார். அப்போது நறுமணம் கொண்ட மலர்களை இறைவன் மேல் தூவி போற்றி பாடினார். அவர் தூவிய மலர்களில் ஒன்று, இறைவன் கழுத்தில் சுற்றியிருந்த நாகத்தின் மீது விழுந்தது. உடனே அந்த நாகம், விநாயகர் தன்னையும் மலர் தூவி வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது.
 
நாகத்தின் இந்த எண்ணம் சிவபெருமானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தனது கோபத்தை வெளிக்காட்டாமல், விநாயகரின் வழிபாடு முடிவடையும் வரை காத்திருந்தார். விநாயகர் வழிபாட்டை முடித்து அங்கிருந்து புறப்பட்டதும், தன் கழுத்தில் இருந்த நாகத்தை எடுத்து கீழே வீசி எறிந்தார் சிவபெருமான்.
 
சிவபெருமான் கொடுத்த சாபத்தால், தங்கள் சக்தியை இழந்த அந்த நாகங்கள் பூலோகத்தில் வந்து விழுந்தன. அதன் பின்னர் நாக இனத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக கருதப்படும் ராகு, கேது, அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகியோர் சிவபெருமானை சந்தித்து, சாப விமோசனம் கேட்டனர்.
 
ஒரு நாகம் செய்த தவறுக்காக, நாக இனம் முழுவதையும் தண்டித்திருக்க வேண்டியதில்லை என்று நினைத்து கோபம் குறைந்தார் சிவபெருமான். சிவராத்திரியன்று நான்கு வேளைகளிலும், வேளைக்கு ஒரு சிவலிங்கமாக, பூலோகத்தில் நான்கு இடங்களில் இருக்கும் சிவலிங்கங்களை வழிபட்டால், உங்கள் இனத்தினர் இழந்த சக்திகள் அனைத்தும் மீண்டும் கிடைக்கும்’ என்று சாப விமோசனமளித்தார்.
 
அதன்படி கும்பகோணம், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில், திருப்பாம்புரம் பாம்புபுரேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில் ஆகிய நான்கு இடங்களில் அமைந்திருந்த கோவில்களில் இருக்கும் சிவலிங்கங்கள், தங்கள் வழிபாட்டிற்கு ஏற்றவை என்று சிவலிங்கத்துக்கு வழிபாடு செய்து, சாப விமோசனம் பெற்றனர்.
 
அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘நாகங்களே! உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன். என் உடலில் அணி கலன்களாக இருந்த நாகங்கள், மீண்டும் என்னை வந்தடையும்’ என்று சிவபெருமான் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :